"இரும்புத்திரை" பட இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஹீரோ. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷினி, அர்ஜுன், ரோபோ சங்கர், அபய் தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டிசம்பர் மாதம் 20ம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய  முடிவு செய்து படக்குழு, புரோமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே வித்தியாசமான புரோமோஷன்களுக்கு பஞ்சம் இருக்காது. ரெமோ படத்தின் போது க்யூட் பொம்மைகளை வைத்தும், சீமராஜா படத்தின் போது பயோஸ்கோப்பை வைத்தும் புரோமோஷன் செய்துள்ளனர். 

அதற்காக "அஞ்சான்", "கோச்சடையான்" பட புரோமோஷன் டெக்னிக்கை கையில் எடுத்துள்ளது ஹீரோ படக்குழு. இதற்கு முன்பு இருபடங்களின் ரிலீஸுக்கு முன்பும் வீடியோ கேம்கள் வெளியிடப்பட்டன. ஆனால் அந்தப் படத்தைப் போன்றே வீடியோ கேம்களும் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை. எனவே தமிழ் சினிமாவில் எந்த படத்திற்கும் இல்லாத அளவில் ஏ.ஆர். கேம் முறையில் ஹீரோ கேம்மை வெளியிட முடிவு செய்துள்ளனர். 

இதுகுறித்து ஹீரோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தங்களது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்கு கேம் வெளியிட்ப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் #PlayHero ஹேஷ்டேக்கை டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.