Aranthagi Nisha : சென்னையை தொடர்ந்து தென் மாவட்டங்களில் பெய்த கன மழை அப்பகுதிகளை வெள்ளக்காடாக மாற்றியது அனைவரும் அறிந்ததே. வரலாறு காணாது வகையில் கொட்டி தீர்த்த மழையால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர் என்றே கூறலாம்.
வெள்ள பாதிப்புகளிலிருந்து சென்னை இன்னும் முழுமையாக வெளியாகத நிலையில், சில வாரங்களுக்கு முன்பு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்தது. முதல் மாடி வரை நீரில் மூழ்கும் வகையில் வெள்ளநீர் பெரிய அளவில் சூழ்ந்தது. வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் உடல்கள் நீரில் மிதந்து சென்ற காட்சிகள் மனதை உலுக்கும் வகையில் இருந்தது.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் முளைக்காரப்பட்டியில் நேற்று முன்தினம் சுமார் 20 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. ராமநாதபுரத்தில் 19 சென்டிமீட்டர் மழையும், நாங்குநேரியில் 18.6 சென்டிமீட்டர் மழையும் மற்றும் நம்பியாறு அணைப்பகுதியில் 18.5 சென்டிமீட்டர் மழையும் கொட்டி தீர்த்தது. சுமார் ஒரு வார காலத்திற்குப் பிறகு தற்போது வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில் தென் மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது.
அரசும், தன்னார்வலர்கள் பலரும் இணைந்து மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகை அறந்தாங்கி நிஷா அவர்கள் தனது கணவருடன் இணைந்து மக்களுக்கு தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கினார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவையும் வெளியிட்டிருந்தார்.
அந்த பதிவில் "ஈரத்தையும் வீரத்தையும் அள்ளிக் கொடுக்கும் தென் மாவட்ட பகுதி, இன்று அவர்களுடைய துன்பத்தில் தோள் கொடுக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. இந்த நிலைமை நீங்கி மறுபடியும் அவர்கள் மீண்டு வர நாம் அனைவரும் தோள் கொடுப்போம்" என்று கூறியிருந்தார். நிஷாவின் இந்த மிகச்சிறந்த செயலுக்கு மக்களும், நெட்டிசன்களும் மனதார தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
