சக நடிகர்களுடன் காதல், ஏகப்பட்ட தொழிலதிபர்களுடன் திருமணம் என்று எப்படிப்பட்ட கிசுகிசுக்கள் வந்தாலும் சற்றும் மனம் கலங்காத நடிகை ஹன்ஷிகா மோத்வானி சரவணா ஸ்டோர்ஸ் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று ஊடகங்களில் வந்த செய்திகளுக்கு அலறியடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.

அல்டிமேட் ஸ்டார் அஜீத்தும், தளபதி விஜய்யும் தங்கள் லெவலிலிருந்து அடுத்த கட்டத்துக்குத் தாவி விட்டதால் வெற்றிடமாக இருக்கும் அவர்கள் இருவரது இடத்தையும் ஒரே ஆளாக நிரப்ப மிக விரைவில் தமிழ் சினிமா நாயகனாக உதயமாகவிருக்கிறார் அண்ணாச்சி அருள். இப்படத்தை அண்ணாச்சி நிறுவனங்களின் நிரந்தர விளம்பர இயக்குநர்களாக உள்ள ஜே.ட்.-ஜெர்ரி இரட்டையர்கள் இயக்க நட்சத்திர மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு மிக வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் அண்ணாச்சிக்கு அண்ணியாக நடிக்க முதலில் நயன்தாரா அணுகப்பட்டு, அவர் அலறியடித்து ஓடியதைத் தொடர்ந்து தமன்னா, ஹன்ஷிகா மோத்வாணி ஆகியோர் பெயர்கள் அண்ணாச்சி & கோ வின் பரிசீலனையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டன. இச்செய்தியைக் கேட்டு நயன்தாரா போலவே அதிர்ந்த ஹன்ஷிகா இன்று சற்றுமுன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘நாட் ட்ரூ’என்று இரண்டே வார்த்தைகளில் ரத்தினச் சுருக்கமாக பதிவிட்டிருக்கிறார். ‘நோ மீன்ஸ் நோ’என்று சொல்லியிருக்கும் ஹன்ஷிகாவை இத்தோடு விட்டுவிடுவார்களா அல்லது பெரிய சம்பளம் பேசி கவிழ்ப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.