கமலின் சரித்திரம், பூகோளம் எதுவும் தெரியாமல் அரைவேக்காட்டுத்தனமாக, ‘30 வருடமாக தமிழ் மக்களை சினிமா மோகத்தில் ஆழ்த்திய கமலுக்கு மத்திய அரசை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது’ என்று கேட்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.

இன்று கொருக்குப்பேட்ட 41 வது வார்டில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஹெச். ராஜா,’ கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எண்ணற்ற பணிகளை மத்திய அரசு துரிதமாக எடுத்து வருகிறது. இந்த நிலையில் புயல் பாதித்த இடங்களை 17-வது நாளில் போய் பார்வையிட்ட கமல் மத்திய அரசு மக்களை வஞ்சிப்பதாக குற்றம் சாட்டி இருக்கிறார்.

கடந்த 30 ஆண்டுகளாக தமிழக மக்களை சினிமா என்னும் மோகத்தில் ஆழ்த்தியிருக்கும் கமலுக்கு மத்திய அரசை விமர்சிக்க என்ன யோக்கியதை இருக்கிறது? என்று காட்டமாக கேட்கிறார்.

இவர்களுக்கு மத்தியில் உள்ள மற்ற பஞ்சாயத்துகளைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். வரலாறு முக்கியம்  மங்குனி மந்திரியாரே என்னும் அடிப்படையில் கமல்  தமிழக மக்களை சினிமா மோகத்தில் ஆழ்த்தி வருவது 30 ஆண்டுகளாக அல்ல, என்பதோடு ஹெச்.ராஜாவுக்கு தேவையான வரலாற்றுக் குறிப்பை எடுத்து வழங்கவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

கமல் வயதுக்கு வந்த பிறகு நடித்த முதல் ‘ஏ’ படம் ‘அரங்கேற்றம்’.படம் வெளிவந்த ஆண்டு 1973. அதற்கு அடுத்து 1977ல் வெறுமனே கோவணம் மட்டுமே கட்டி நடித்த ‘16 வயதினிலே’க்குள்ளாக மட்டுமே அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை சுமார் 55. இதில் ‘அரங்கேற்றம்’ தொடங்கி ‘உணர்ச்சிகள்,’பருவகாலம்’,’ராசலீலா’, ‘அந்தரங்கம்’,ஞான் நின்ன பிரேமிக்குன்னு’,’நீ எண்டெ லஹரி’ போன்ற ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பிட்டுப் படங்களும் அடக்கம்.

ஆக கமல் தமிழக மக்களை சினிமா மோகத்தில் ஆழ்த்தி வருவது 30 ஆண்டுகளாக அல்ல 45 வருடங்களாக என்பதை தெரிவித்து, இந்த தகவல் அளித்தமைக்கான பேட்டா, கன்வேயன்ஸை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.