நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சர்வம் தாளமயம்.  ஜிவி பிரகாஷ் நடித்த இந்த படத்திற்கு, முதல் முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.  

மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி, இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.  இசைக்கு பேதம் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக எடுக்கப்பட்டிருந்த இந்த படம், ரசிகர்களிடம் நல்ல ஆதரவை பெற்று வெற்றியடைந்தது.

இந்நிலையில் இந்தப் படம் 22 வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட  விழாவில் திரையிடப்பட  உள்ளது.  இதனை  ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.  ஜூன் 15 முதல் ஜூன் 24ஆம் தேதி வரை இந்த சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. இதில்  நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி  திரைப்படமும் திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.