இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமாரும், பின்னணி பாடகி சைந்தவியும் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்திருந்த நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பு தேதி உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

GV Prakash - Saindhavi Divorce Case : இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் தங்களது திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக கடந்த ஆண்டு அறிவித்தனர். 11 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக இருவரும் சமூக வலைதளங்கள் மூலம் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அவர் போட்ட பதிவில், "நீண்ட யோசனைக்குப் பிறகு, 11 வருட திருமண வாழ்க்கையை நானும் ஜி.வி.பிரகாஷும் முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம். பரஸ்பர மரியாதையை பேணி, எங்கள் இருவரின் மன அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம்.

மிகவும் தனிப்பட்ட இந்த மாற்றத்தின் போது, எங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தை புரிந்து கொண்டு மதிக்க வேண்டும் என்று ஊடகங்கள் மற்றும் நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். பிரிவது கடினம் என்றாலும், இதுவே நாங்கள் இருவரும் எடுக்கக்கூடிய சிறந்த முடிவு என்பதை உணர்கிறோம். இந்த கடினமான நேரத்தில் உங்கள் புரிதலும் ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம். நன்றி," என்று சைந்தவி பதிவிட்டிருந்தார். இதே பதிவை ஜி.வி.பிரகாஷ் குமாரும் பகிர்ந்திருந்தார்.

ஜி.வி.பிரகாஷ் சைந்தவி விவாகரத்து வழக்கு

இதையடுத்து இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஜிவி பிரகாஷ், சைந்தவி இருவரையும் இன்று நேரில் ஆஜராகக் கோரி குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுந்தரி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இருவரும் ஆஜராகி தாங்கள் விவாகரத்து பெற்று பிரியும் முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்த நிலையில், வருகிற செப்டம்பர் 30ந் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

2013-ல் இருவருக்கும் திருமணம் நடந்தது. 2020-ல் அன்வி என்ற மகள் பிறந்தார். இருவரும் பள்ளிப் பருவம் முதலே காதலித்து வந்தவர்கள். 'ஜென்டில்மேன்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடலைப் பாடிதான் ஜி.வி.பிரகாஷ் குமார் திரையுலகிற்குள் நுழைந்தார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரெஹானாவின் மகன் ஆவார். பின்னர் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பல துறைகளிலும் வெற்றி கண்டார். கர்நாடக இசைப் பாடகியான சைந்தவி, 12 வயது முதல் கச்சேரிகளை நடத்தி வருகிறார். பின்னர் தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.