GV Prakash : இந்த நாளுக்காகத் தான் காத்திருந்தேன்... முதல்முறையாக தேசிய விருது வென்ற ஜிவி பிரகாஷ் உருக்கம்
GV Prakash : சூரரைப் போற்று படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது ஜிவி பிரகாஷின் பின்னணி இசை. தற்போது அதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதால் அவர் மிகுந்த உற்சாகம், அடைந்துள்ளார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கடந்த 2006-ம் ஆண்டு வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான வெயில் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதையடுத்து தமிழில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்த இவருக்கு தேசிய விருது என்பது எட்டாக் கனியாக இருந்தது. அது தற்போது நனவாகி உள்ளது.
இவர் சூர்யாவின் சூரரைப்போற்று படத்துக்கு இசையமைத்ததற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை வென்றார். அவர் வெல்லும் முதல் தேசிய விருது இதுவாகும். சூரரைப் போற்று படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது ஜிவி பிரகாஷின் பின்னணி இசை. தற்போது அதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதால் படக்குழு மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளது.
முதல்முறையாக தேசிய விருது வென்றது குறித்து ஜிவி பிரகாஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “ஒரு நாள் நீ பெரிய இடத்தை அடைவாய்... ஒரு நாள் நீ வெற்றிபெறுவாய்.. ஒரு நாள் நீ நினைத்தபடி எல்லாம் நடக்கும்னு சொன்னாங்க.. இப்போ நீண்ட காத்திருப்புக்கு பின்னர் அந்த நாள் வந்துள்ளது.
அனைவருக்கு நன்றி... எனது தந்தை வெங்கடேஷுக்கும், எனது மனைவி சைந்தவி, எனது தங்கை பவானி எனது குழந்தை அன்வி அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. எனக்கு வாய்ப்பளித்த சூர்யா, சுதா கொங்கரா உள்ளிட்ட சூரரைப் போற்று படக்குழுவுக்கு மிக்க நன்றி. எனது இசைக்குழுவினருக்கு ஸ்பெஷல் நன்றி. என் வாழ்வின் முக்கியமான நாள் இது. அன்புடன் ஜிவி” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.