ஏ.ஆர். முருகதாஸின் பட இசை வெளியீட்டு விழாவில் பிரமாண்ட இயக்குனர்கள் சங்கரும், ராஜமௌலியும் பங்கேற்க உள்ளனர்.

இந்தியாவின் பிரமாண்டமான இயக்குனர்களில் முக்கியமானவர்கள் இயக்குனர்கள் சங்கர் மற்றும் எஸ்.எஸ்.ராஜமௌலி.

ராஜமௌலியின் பாகுபலி படம் வெளியானபோது பிரம்மாண்டத்தின் நாயகன் பட்டம் சங்கரிடம் இருந்து இவரிடம் சென்றுவிட்டது. தற்போது சங்கர் இயக்கும் 2.0 படத்தின்மூலம் தனது பட்டத்தை மீண்டும் தன் பக்கம் இழுப்பாரா? என்றும், ‘பாகுபலி 2’ படத்தின் வசூலை முறியடிக்கும் ஆற்றல் ஷங்கரின் ‘2.0’ படத்திற்கு மட்டுமே உள்ளது என்றும் அனைவரும் 2.0-வை அதிக எதிர்ப்பார்ப்புடன் நோக்கி இருக்கிறோம்.

இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘ஸ்பைடர்’ படத்தின் இசை வெளியீடு வரும் 9-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

ஒரே மேடையில் தமிழ், தெலுங்கு பாடல்கள் வெளியாகவுள்ள நிலையில் தமிழ் பாடல்களை இயக்குனர் சங்கரும், தெலுங்கு பாடல்களை இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியும் வெளியிடவுள்ளனர்.

இவ்விரண்டு பிரமாண்ட இயக்குனர்களை இணைத்தப் பெருமை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸையே சேரும்.

இவர் இயக்கிய ‘ஸ்பைடர்’ படம் வரும் 27-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது என்பது கொசுறு தகவல்.