மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க தமிழ் சினிமாவில் நிலவும் போட்டிகளில் புதிதாக இயக்குநர் கவுதம் மேனனும் களம் இறங்கியுள்ளார்.

இயக்குனர் பிரியதர்ஷினி ஜெயலலிதா வாழ்க்கைக் கதையை நித்யாமேனன் நடிக்க, `த அயர்ன் லேடி’ என்ற பெயரில் இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5-ந்தேதி வெளியானது. படப்பிடிப்பு ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி தொடங்க இருக்கிறது.

ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை இயக்குனர் விஜய்யும் இயக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக வித்யாபாலனும், சசிகலாவாக சாய்பல்லவியும் நடிக்க இருக்கிறார்கள் என்றும், எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி நடிப்பார் என்றும் செய்தி வந்துள்ளது. இவர்கள் தவிர இயக்குனர் பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப்போவதாக அறிவித்துள்ளார். இவர்களுடன் இயக்குநர் லிங்குசாமியும் ஜெ’ வாழ்க்கையை படமாக்கவிருப்பதாக சசிகலா தரப்பே அதிகாரபூர்வமாக அற்வித்தது. 

இந்நிலையில் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை மட்டும், அதிலும் குறிப்பாக அவர் அப்பல்லோவில் வைக்கப்படிருந்த 75 நாட்களை ஹைலட் பண்ணி  டிவியில் தொடராக வெளியாக இருக்கிறது. இந்த தொடரை பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்குகிறார். ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பார் என்றும் 30 பகுதிகளாக இந்த தொடர் ஒளிபரப்பப்படும் என்றும் கூறுகிறார்கள்.

ஒவ்வொரு பகுதியும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்பட இருக்கிறது. நடிகர்கள் ரஞ்சித், வினீத் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்க, மற்றவர்களைப் போல ஆற அமர இல்லாமல் உடனடியாகத் துவங்கப்படும் என்று தெரிகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் கடன்காரராக சில கோடிகளுக்கு வட்டி கட்டிக்கொண்டிருக்கும் கவுதம் மேனன் இந்த டி.வி. தொடரை இயக்க 10 கோடி ரூபாய் சம்பளம் பேசியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.