கமல்ஹாசனின் 'தக் லைஃப்' படத்தின் புரமோஷனில் அவர் கூறிய கருத்துக்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மஹாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கமலின் பேச்சுக்கு கடும் விமர்சனம் செய்துள்ளார்.
கமல்ஹாசன் பேச்சுக்கு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு : கமல்ஹாசன் நடித்துள்ள புதிய திரைப்படமான படமான 'தக் லைஃப்' வருகிற ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் புரமோஷனின் போது தமிழில் இருந்து வந்தது கன்னடம் என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. மேலும் கமலின் தக் லைஃப் திரைப்படம் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டது. கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என அரசும் அறிவித்துள்ளது.
'தக் லைஃப்' திரைப்படம் வெளியாவதில் சிக்கல்
இதன் காரணமாக கமலுக்கு சிக்கல் உருவாகியுள்ளது. அதே நேரம் கமலுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர்கள் சங்கமும் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் தமிழ்- கன்னட மக்களுக்கு பிரிவை ஏற்படுத்தும் வகையில் சூழ்ச்சி நடப்பதாகவும் இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளது. இந்த நிலையில் மஹாராஷ்டிரா மாநில அளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கமலை பற்றி ஒரு ஆளுநர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை, கமலஹாசன் என்றைக்காவது ஒன்றை ஒழுங்காக தெளிவாக சொல்லி இருக்கின்றாரா.? திமுகவை ஒழிப்பது தான் என்னுடைய வேலை என்று இயக்கத்தை ஆரம்பித்தார் இன்றைக்கு திமுகவோடு இருப்பதுதான் தமிழகத்திற்கு நன்மை பெயருக்கும் என்று சொல்லுகிறார்.
சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ்
இவருக்கு எது நன்மை பயக்குகிறதோ அது தமிழகத்தின் நன்மை என்று நினைக்கிற வரை பற்றி என்னிடத்தில் எதற்கு கருத்து கேட்கிறீர்கள் என ஆவேசமாக தெரிவித்தார். பதவிக்காக கமல் அப்படி பேசி இருக்கிறார், இங்கே தீப்பற்றி எறிந்தாலும் அதைப்பற்றி அவருக்கு கவலை இல்லை தனக்கு பதவி வேண்டும் என்று நினைக்கின்ற மனிதராக கமல் இருக்கிறார். சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் பிறந்துள்ளது என்று யாராவது ஒருவர் சொன்னால் நாம் ஏற்றுக் கொள்வோமா.? ஏற்றுக்கொள்ள மாட்டோம் அல்லவா அதுபோலத்தான் நாம் பேசுகின்ற போது அதிக நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் அவர்கள் தான் பொது வாழ்க்கையில் இருப்பதற்கு தகுதி படைத்தவர்கள் என சி.பி,ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதா.?
தொடர்ந்து பேசி அவர், ஒன்றிய அரசு என்று சொல்வதே முதலில் தவறு, மத்திய அரசு என்று தான் சொல்ல வேண்டும், ஒன்றிய அரசு என்று சொன்னால் மாநிலத்தில் இருக்கின்றது என்ன பஞ்சாயத்து அரசா.? என கேள்வி எழுப்பினார். நீங்கள் வேண்டுமென்றே பிரிவினைவாதத்தை திணிக்கிறீர்கள் அப்படி யாரும் சொல்லவில்லையே உங்களுடைய எண்ணம் தவறாக இருக்கின்ற காரணத்தினால் தான் இதுவரை இல்லாத மொழிபெயர்ப்பை ஏன் தருகிறீர்கள் என கூறினார். திமுக அரசு இப்போது வந்த பிறகுதான் இது போன்ற மொழிபெயர்ப்புகள் எல்லாம் வருகின்றது என கூறினார்.
