பாடி ஷேமிங் விவகாரத்தில் யூடியூபர் கார்த்திக் பொறுப்பேற்காமல் மன்னிப்பு கோரியுள்ளார், அவரது வெற்று வார்த்தைகளை ஏற்க முடியாது என்று நடிகை கௌரி கிஷன் கூறியுள்ளார்.

Gouri Kishan controversy : யூடியூபர் கார்த்திக்கின் வருத்தத்தை ஏற்க முடியாது என்று நடிகை கௌரி ஜி கிஷன் தெரிவித்துள்ளார். பொறுப்பேற்காமல் யூடியூபர் மன்னிப்பு கோரியுள்ளார். 'கேள்வி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது, உடல் கேலி செய்யவில்லை' என்று கார்த்திக் கூறியிருந்தார். இதுபோன்ற வெற்று வார்த்தைகளை ஏற்க முடியாது என்று கௌரி கிஷன் கூறினார்.

பட விளம்பரத்திற்காக நடந்த செய்தியாளர் சந்திப்பின் போதுதான் யூடியூபர் கார்த்திக் சர்ச்சைக்குரிய கேள்வி ஒன்றை கேட்டிருந்தார். உங்கள் எடை எவ்வளவு என்ற யூடியூபரின் கேள்விக்கு நடிகை கௌரி கடுமையாக பதிலளித்தார். உடல் எடை குறித்த கேள்வி முட்டாள்தனமானது என்று கூறிய கௌரி ஜி கிஷன், கதாநாயகிகள் அனைவரும் ஒல்லியாக இருக்க வேண்டுமா என்று பதிலுக்கு கேள்வி எழுப்பினார்.

யூடியூபரின் மன்னிப்பை ஏற்க மறுத்த கெளரி கிஷன்

அந்த கேள்வியை யூடியூபர் நியாயப்படுத்த முயன்றபோதும், அது ஒரு மோசமான கேள்வி என்ற தனது பதிலை கௌரி கிஷன் மீண்டும் வலியுறுத்தினார். இந்த சம்பவம் விவாதத்திற்குள்ளான பிறகு, அவதூறுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறிய யூடியூபர், கௌரியின் எதிர்வினை ஒரு பிஆர் ஸ்டண்ட் என்று யூடியூபர் கூறினார்.

இருப்பினும், பலரும் கௌரிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்ததால், பின்னர் வேறுவழியின்றி கார்த்திக் வருத்தம் தெரிவித்தார். கௌரி கிஷனை காயப்படுத்தும் நோக்கம் இல்லை என்றும், கௌரிக்கு மன வருத்தம் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும் கார்த்திக் கூறினார். அதே சமயம், கார்த்திக் தனது செயலை நியாயப்படுத்தவும் செய்தார். உடல் கேலி செய்யவில்லை என்றும், கேள்வி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்றும் கார்த்திக் நியாயப்படுத்தினார்.