'குட் பேட் அக்லீ' படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் - ஹீரோ பற்றி வெளியான தகவல்!
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லீ' படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு, இயக்க உள்ள படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஆதிக் முதல் படமே ஹிட்:
கடந்த 2015 ஆம் ஆண்டு, ஜிவி பிரகாஷ், கயல் ஆனந்தி, மனிஷா யாதவ், நடிப்பில் வெளியான 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இளவட்ட ரசிகர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ஜிவி பிரகாஷுக்கு வெற்றி படமாகவும் அமைந்தது.
சிம்புவால் வந்த தோல்வி:
இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் சிம்புவை வைத்து 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்கிற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தை எஸ் மைக்கேல் ராயப்பன் தயாரித்த நிலையில், இப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த படத்தின் தோல்விக்கு காரணம் நடிகர் சிம்பு தன்னுடைய கதையில் செய்த மாற்றங்கள் தான் காரணம் என, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் குற்றம் சாட்டினார். மைக்கேல் ராயப்பன் இப்படத்தின் நஷ்டத்தை சிம்பு ஏற்க வேண்டும் என கூறி, பெரிய பிரச்சனையே செய்தது குறிப்பிடத்தக்கது.
சோபிதாவை திருமணம் செய்யும் முன் நாக சைதன்யா போட்ட முக்கிய கண்டீஷன்! என்ன தெரியுமா?
'AAA ' படத்தின் தோல்வியால் சுமார் ஆறு வருடங்கள் திரைப்படம் இயக்குவதை தவிர்த்த ஆதிக் ரவிச்சந்திரன், ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் உருவான 'தபாங் 3' படத்தில் தமிழில் டயலாக் ரைட்டராக பணியாற்றினார். மேலும் கே3, நேர்கொண்ட பார்வை, கோப்ரா, போன்ற படங்களில் நடித்தார். பின்னர் 2023-ஆம் ஆண்டு பிரபுதேவாவை வைத்து இவர் இயக்கிய 'பகீரா' திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
மார்க் ஆண்டனி:
இப்படம் வெளியான இதே ஆண்டு 'மார்க் ஆண்டனி' என்கிற திரைப்படத்தை விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யாவை வைத்து இயக்கி இருந்தார். டைம் ட்ராவல் குறித்த சயின்ஸ் பிக்சன் - ஆக்சன் காமெடி ஜர்னரில் எடுக்கப்பட்ட இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமார் 150 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டியது 'மார்க் ஆண்டனி' திரைப்படம்.
அஜித்துக்கு கூறிய கதை:
'நேர்கொண்ட பார்வை' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்த ஆதிக் ரவிச்சந்திரன், தல அஜித்தை சந்தித்து அவருக்காக எழுதப்பட்ட 'குட் பேட் அக்லீ' திரைப்படத்தின் கதையை கூறிய நிலையில், இந்த கதை படுமாஸாக இருந்ததால் அஜித் உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். அதன்படி விடாமுயற்சி திரைப்படம் முடிவடைய தாமதம் ஆனதால், குட் பேட் அக்லீ படத்திலும் நடித்து முடித்துவிட்டார் அஜித். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.
அமரன் பட வெற்றி; SK 25 படத்திற்கு தாறுமாறாக சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்!
குட் பேட் அக்லீ:
அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ள இந்த படத்தில், அஜித் ட்ரிபிள் ரோலில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் 'விடாமுயற்சி' படத்தை தொடர்ந்து த்ரிஷா கிருஷ்ணன் தான் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு ,உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தை, மைத்ரி மூவிஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலு குட்டி படத்தொகுப்பு செய்துள்ளார்.
மார்க் ஆண்டனி 2 :
'குட் பேட் அக்லீ' படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ள நிலையில், இதைத்தொடர்ந்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்க ஆதிக் ரவிச்சந்திரன் தயாராகி உள்ளார். அதன்படி ஆதிக் ரவிச்சந்திரன் 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இதற்கான பணிகளை மெல்ல மெல்ல அவர் துவங்கி வருவதாகவும், 'குட் பேட் அக்லீ' படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த பின்னர், 'மார்க் ஆண்டனி 2' திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. அதே போல், முதல் பாகத்தில் கலக்கிய விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா தான் இரண்டாவது பாகத்திலும் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.