Gold Smuggling Case Ranya Rao Fine : தங்க கடத்தல் வழக்கில் கன்னட நடிகையான ரவ்யா ராவிற்கு ரூ.102.55 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தங்கக் கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102.55 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அபராத தொகையை செலுத்தாவிட்டால் அவரது சொத்துக்கள் முடக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கன்னட நடிகை ரன்யா ராவ் கடந்த மார்ச் மாதம் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். ரூ.12.56 கோடி மதிப்புள்ள தங்கத்தை துபாயில் இருந்து சட்டவிரோதமாக கடத்தியதற்காக அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில், அவர் வெளிநாட்டுச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளார்.

மார்ச் மாதம், ரன்யா ராவ் துபாயிலிருந்து பெங்களூரு வந்தபோது, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 14.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தங்கத்தின் சந்தை மதிப்பு ரூ.12.56 கோடி என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) அதிகாரிகள் விசாரணை நடத்தி, தங்கக் கடத்தலில் அவரது பங்கை உறுதிப்படுத்தினர். அவரது இயற்பெயர் ஹர்ஷவர்தினி ரன்யா, சினிமாவில் ரன்யா ராவ் என்ற பெயரில் அறியப்படுகிறார்.

அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை சரியான நேரத்தில் தாக்கல் செய்யாததால், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இருப்பினும், FEMA மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தான் தங்க கடத்தல் வழக்கில் ரன்யா ராவுக்கு மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தண்டனை காலத்தில் ரன்யாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தான் ரன்யா ராவிற்கு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ரூ.102.55 கோடி அபராதம் விதித்துள்ளது. அதோடு இந்த வழக்கில் தொடர்புடைய தருண் கொண்டூர் ராஜு, சாஹில் ஜெயின் மற்றும் பாரத் ஜெயின் ஆகிய மூவருக்கும் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் மொத்த அபராதத் தொகை ரூ.270 கோடியைத் தாண்டியுள்ளது.