God will call me I will go to Padmanabaswamy temple - yesudas waiting with hope
கடவுள் என்னை கூப்பிடுவார். பத்மநாபசுவாமி கோயிலுக்குச் செல்வேன் என்று பாடகர் ஏசுதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற பாடகர் ஏசுதாஸ் கிறிஸ்தவர் என்றாலும் இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டதால் சபரிமலை ஐயப்பன் கோயில், கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோயில் ஆகியவற்றுக்கு அடிக்கடி சென்று தரிசனம் செய்வார்.
ஒருமுறை குருவாயூர் குருவாயூரப்ப சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய விரும்பிய ஏசுதாசுக்கு அனுமதி வழங்கப்படாததால் இனிமேல் கிருஷ்ணர் கோயில்களுக்கே செல்வதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டார்.
இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் நடந்த கச்சேரியில் பேசிய அவர், “பல ஆண்டுகளுக்கு முன் குருவாயூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அப்போது இருந்த கோபத்தில் இனி கிருஷ்ணர் கோயிலுக்கே செல்ல மாட்டேன் என்று தீர்மானித்துவிட்டேன்.
சில ஆண்டுகள் முன் என் நெருங்கிய நண்பர் வற்புறுத்தியதால் உடுப்பி கிருஷ்ணன் கோயிலுக்குச் சென்றேன். அத்துடன், கிருஷ்ணர் கோயிலுக்குப் போகமாட்டேன் என்ற என் பிடிவாதத்தைக் கைவிட்டேன். அதற்காக, கடவுளிடம் மன்னிப்பு கேட்டேன்.
அதேபோன்று, கடவுள் அழைக்கும்போது நான் பத்மநாபசுவாமி கோயிலுக்கு செல்வேன். பாடுவேன். நேரம் வரும்போது கடவுள் என்னை கூப்பிடுவார்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
