விஜய நிர்மலா  ஆந்திர திரையுலகில் நடிகை, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகப் பணிபுரிந்தவர். இவர் தெலுங்கு மொழியில் 44 படங்களை இயக்கியுள்ளார். 2002இல் இவரது பெயர் அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

கடந்த 2008இல், தெலுங்கு திரைப்படத்துறையில் பங்களித்ததற்காக "ரகுபதி வெங்கையா விருதினைப்" பெற்றுள்ளார்.  இவரும், தெலுங்கு நடிகையான  சாவித்திரி ஆகிய இருவர் மட்டுமே புகழ் பெற்ற  சிவாஜி கணேசனை இயக்கிய பெருமைக்குரியவர்கள்.

விஜய நிர்மலா, ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்த  தெலுங்கு குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை திரைப்படத் தயாரிப்பில் பணிபுரிந்தவர். இவரது முதல் கணவர் கிருஷ்ண மூர்த்தி மூலமாக நரேஷ் என்கிற மகன் பிறந்தார்.

நரேஷ் தற்போது நடிகராக இருக்கிறார். இவரது முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு, தெலுங்கு நடிகரான கிருஷ்ணாவை மணந்து கொண்டார்.