தன்னுடைய 14 வயதிலேயே கலை துறையில் காலடி எடுத்து வைத்து,  மெல்ல மெல்ல தன்னுடைய திறமையை வளர்த்து கொண்டு, நாடகம், எழுத்தாளர், இயக்குனர், நடிகர் என ரசிகர்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர் பழம்பெரும் நடிகர் கிரீஷ் கர்னாட்.

கடந்த இரண்டு வருடமாக மூச்சு திணறல் பிரச்சனை காரணமாக அவதி பட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் பெங்களூரில்  உள்ள அவருடைய வீட்டில் காலமானார். தற்போது இவருக்கு வயது 81 . 

இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பு இன்று வரை ரசிகர்களால் தனித்துவம் மிக்கதாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

கடந்த 1974ம் ஆண்டு, மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவித்தது.   1992ம் ஆண்டு அவர் பத்ம பூஷண் விருது பெற்றார்.  1994ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதும், 1998ம் ஆண்டு நாடகத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும்  ஞானபீட விருதும் இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த கன்னட நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனருக்கான பிலிம்பேர் விருதுகள், தேசிய விருதுகளை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் இவருக்கு பிரபல அரசியல் தலைவர்களும், பிரபலங்களுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், கர்னாடக முதல்வர்ன் குமாரசாமி, அவருடைய ட்விட்டர் பக்கத்தில் "ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் மற்றும் நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், கிரீஷ் கர்னாட் மறைவுக்கு மிகுந்த வருத்தம் கொள்கிறேன்.  இலக்கியம், சினிமா மற்றும் படங்களில் அவரது சிறந்த பங்களிப்பு எப்போதும் நினைவில் கொள்ளப்படும். அவருடைய மரணத்தில், நாம் ஒரு கலாச்சார தூதரை இழந்தோம். அவருடைய ஆத்துமா சாந்தியடையவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்".

இதே போல் பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் குறிப்பில்," நடிப்பு திறமையால், அனைத்து ஊடகங்கள் மூலம் தன்னை நினைவூட்டுபவர் கிரிஷ் கர்னாட், உணர்ச்சி பொங்கும் அவரது பேச்சு மனதை கட்டிபோடும். வரும் காலங்களிலும் அவரது படைப்புகள் மிகவும் பிரபலமாக வேண்டும். கிரிஷ் கர்னாட் மறைந்த செய்தி கேட்டு வருத்தம் அடைவதாகவும், அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்".   

உலக நாயகன் கமலஹாசன் சமூக வலைத்தளத்தில் போட்டுள்ள இரங்கல் குறிப்பில், "கிரிஷ் கர்னாட் கதைகளைக் கண்டு வியந்ததாகவும் அவரின் உதவியாளர்கள் பலர் திரைத்துறையில் வசனகர்த்தாவாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிரிஷ் கர்னாட்  மறைவை அவர்கள் ஈடுசெய்வார்கள் என கமல் குறிப்பிட்டுள்ளார்". மேலும் பலர் தொடர்ந்து இவருடைய மறைவிற்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.