’டாக்டர்கள், வழக்கறிஞர்கள் என்று மெத்தப் படித்தவ்ர்களை மட்டும் வேட்பாளர்களாக அறிவித்தால் போதுமா? அவர்களது உண்மையான தகுதிகள் என்ன என்று கமல் மக்களுக்கு எடுத்துச்சொல்லாவிட்டால் எதை நம்பி ஓட்டுப்போடுவார்கள்?’ என்று மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருக்கு நடிகையும், பாரதிய ஜனதா கட்சிப் பிரமுகருமான ’சவுகிதார்’ காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடன இயக்குநரும், ஒரு சில தோல்விப்படங்களில் நடித்தவருமான காயத்ரி ரகுராம் கமல் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சி, குடித்துவிட்டுக் கார் ஓட்டி அடிக்கடி விபத்து ஏற்படுத்துவது போன்றவற்றால் மட்டுமே புகழ்பெற்றவர். தனது ட்விட்டர் பதிவுகள் மூலம் பிஜேபியினரிடமே கூட வம்பு வளர்த்து பப்ளிசிட்டி தேடிக்கொள்பவர்.

கடந்த 20 ம் தேதியன்று கமல் தனது கட்சியின் முதல்கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பாக 21 பெயர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டிருந்தார். மற்ற கட்சிகளில் பள்ளிக்கூடம்னா எங்க இருக்கு? என்று கேட்கக்கூடிய அள்விலேயே வேட்பாளர்கள் பட்டியல் இருக்க, கமலின் பட்டியலில் இடம்பெற்ற அனைவருமே டாக்டர்கள், வக்கீல்கள் என்று அதிகம் படித்தவர்களின் பட்டியலே இடம்பெற்றிருந்தது.

இப்பட்டியலை பெரும்பாலானோர் பாராட்டிக்கொண்டிருக்க கமலால் புகழ்பெற்ற காயத்ரியோ,’கமல் தனது வேட்பாளர்களின் முகத்தைக்கூட வெளியே காட்டாமல் வழக்கம்போல் தன்னை மட்டுமே முன்னிலைப் படுத்திக்கொண்டிருக்கிறார்.  டாக்டர்கள், வழக்கறிஞர்கள் என்று மெத்தப் படித்தவ்ர்களை மட்டும் வேட்பாளர்களாக அறிவித்தால் போதுமா? அவர்களது உண்மையான தகுதிகள் என்ன என்று கமல் மக்களுக்கு எடுத்துச்சொல்லாவிட்டால் எதை நம்பி ஓட்டுப்போடுவார்கள்? இதெல்லாம் வேலைக்கு ஆகாது’ என்று கிண்டலடித்துள்ளார்.