மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க இயக்குநர்கள் போட்டி, போட்டு வருகின்றனர். முதலில் வெற்றிடத்தை நிரப்ப களம் இறங்கிய ஏ.எல்.விஜய், சமீபத்தில் அனைவரையும் முந்திக்கொண்டு "தலைவி" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை வெளியிட்டார். ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வரும் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது. அயர்ன் லேடி ஜெயலலிதாவின் உருவம் மற்றும் முகத்தோடு கங்கனாவின் உருவம் பொருந்தவில்லை என கடும் விமர்சனங்கள் எழுந்தன. "தலைவி" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நெட்டிசன்களால் பலவகையில் ட்ரால் செய்யப்பட்டது.

இது எதற்கும் அசராத படக்குழு தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி வருகிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு வந்த விமர்சனங்களை சரி செய்யும் விதமாக "தலைவி" படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தயாராகி வரும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான "குயின்" வெப் சீரிஸின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. பிறரது தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்பதை உணர்ந்த கெளதம் வாசுதேவ் மேனன், அதை தனது புரோமோஷன் டெக்னிக்காகவும் பயன்படுத்தியுள்ளார். 

ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் "குயின்" படத்தின் டீசர், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஜெயலலிதாவின் பள்ளிப் பருவம் முதல் அரசியல் வாழ்க்கை வரை சித்தரிக்கும் இந்த வெப் தொடர் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் கெளதம் வாசுதேவ் மேனன் பயன்படுத்தியுள்ள புது யுக்தி தான். "தலைவி" படத்தில் கங்கனாவின் தோற்றம் விமர்சிக்கப்பட்டதை அடுத்து, "குயின்" வெப் சீரிஸில் ரம்யா கிருஷ்ணனின் முகம் ஒரு இடத்தில் கூட காட்டப்படவில்லை.

சுமார் 26 நொடிகள் ஓடும் அந்த டீசரில் ஒரு இடத்தில் கூட ரம்யா கிருஷ்ணன் சைடு போஸைக் கூட காட்டவில்லை.  ரம்யா கிருஷ்ணன் எப்படி ஜெயலலிதாவா மாறியிருக்காங்கன்னு பார்க்க ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர். ஆனால் கங்கனா விவகாரத்தில் பாடம் கற்ற கவுதம் வாசுதேவ் மேனன் அதை திறமையாக தவிர்த்துவிட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் கெளதம் வாசுதேவ் மேனனின் இந்த டிரிக்ஸ் டிரைலர் மற்றும் வெப் சீரிஸ் மீதான ஆர்வத்தை இரட்டிப்பாக்கியுள்ளது.