ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள பேட்ட திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாக உள்ளது. சமீபத்தில், படத்தில் இடம் பெற்றுள்ள மரண மாஸ் என்ற பாடலை  அறிமுக பாடலை இசையமைப்பாளர் அனிருத்தும்,பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இணைந்து பாடியுள்ளனர். ஆனால், பாடலில் அவருக்கு குறைந்த அளவிலேயே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஒருசாரர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

இந்நிலையில், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு மீம்ஸை பதிவிட்டுள்ளார். சர்கார் படத்திம் டிரைலரில், விஜய் தான் ஓட்டு போட வந்துவிட்டதாகக் கூறுவார், பின்னர் “அவர் ஓட்டை வேறு யாரோ போட்டுட்டாங்க” என்று வசனங்கள் வரும்.இந்த காட்சியைக் கொண்டு உருவாக்கப்பட்ட மீம்ஸை, கங்கை அமரன் பதிவிட்டுள்ளார். இதற்கு, ரஜினி ரசிகர்கள் காரசாரமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

'அந்த பாடலில் ரஜினி பாடும் பகுதிய மட்டும் தான் எஸ்.பி.பி பாடியிருக்கிறார். மற்ற பகுதிகள் ரஜினி அவர்களைப் புகழ்வது போலுள்ளது. அவரை அவரே எப்படி புகழ்ந்து பாட முடியும். பாடலை முழுவதுமாக கேட்டுவிட்டு பொறுப்புடன் மீம்ஸ் போடுங்கள். வயது ஆகிவிட்டது அல்லவா' என்று ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள கங்கை அமரன், 'என் பேரு படையப்பா... இளவட்ட நடையப்பா ... பாசமுள்ள மனுஷனப்பா.. நான் மீச வச்சகுழந்தையப்பா என்றும் நல்லதம்பி நானப்பா நன்றியுள்ள ஆளப்பா..... தாலாட்டி வளர்த்தது தமிழ்நாட்டு மண்ணப்பா......' என்ற படையப்பா பாடலை பதிவிட்டுள்ளார்.அதாவது, படையப்பா படத்தில் ரஜினி புகழ் பாடும் வரிகளை ரஜினியே பாடுவது போல காட்சிகள் இருக்கும் என்று அவர் கூற முற்பட்டுள்ளார். 

இதை தொடர்ந்து, 'என் நண்பர் ரஜினிக்கு என் இன்னொரு நண்பர் மீண்டும் பாடப்போகிறார் என்ற ஆவலுடன் தான் பாடலைக் கேட்டேன். சூப்பர் மிக அமக்களமாக இருந்தது .. ஆனால் இதே முழுப்பாடலையும் எஸ்பிபி பாடிருந்தால் இன்னும் சொல்லமுடியாத அளவுக்கு உயர்ந்திருக்கும் .. அனிருத் தவறாக பாடவில்லை...நன்றாக இருக்கிறது ஆனால்?' என்ற கேள்வியுடன் கங்கை அமரன் பதிவிட்டுள்ளார்.