கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என நடிகர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஏற்கனவே அஜித் கஜா புயல் நிவாரணத்திற்காக 15 லட்சம் கொடுத்தார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அஜித் 5 கோடி ரூபாய் கொடுத்தார் என்று வெளியான செய்திக்கு அஜித் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.


இதுகுறித்து சேலத்தில் அஜித் படங்கள் அனைத்தையுமே மிக  பிரம்மாண்டமாக வெளியிடும் விநியோகஸ்தரும், அஜித்தின் தீவிர ரசிகருமான 7ஜி சிவா.  நேற்று சேலத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், “பலரும் தல அஜித் கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 லட்சம் கொடுத்தார் என்று நினைத்து கொண்டுள்ளனர். ஆனால் அவர் கொடுத்துள்ளது ரூ.15 லட்சம் கிடையாது. 5 கோடி ரூபாய் என தெரிவித்தார். 

அவர் எப்போதும் தான் செய்த உதவிகளை வெளியே சொல்லாதது அவருடைய கேரக்டர். அவருடன் பெர்சனலாகப் பேசியிருக்கிறேன், பழகியிருக்கிறேன் என்பதால் எனக்கு நன்றாக தெரியும். அஜித் சார் எதையுமே விளம்பரப்படுத்திக் கொள்ளமாட்டார்” பேசினார். 

இந்த வீடியோ பதிவு ட்விட்டரில் வைரலாப்  பரவியது. இப்படி ஒரு தகவல் வந்தால் சொல்லவா வேண்டும் அஜித் ரசிகர்கள் இதற்கே ஒரு விழா எடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.  

இந்நிலையில் அஜித் உண்மையில் கொடுத்தது ரூ.15 லட்சமா அல்லது ரூ .5 கோடியா என்பது குறித்து அஜித் தரப்பில் விசாரித்த போது, “அஜித்  நன்கொடைகள் குறித்த தகவல்கள் அனைத்துமே செய்தித் தொடர்பாளர் வாயிலாகவே தெரிவிக்கப்படும். அல்லது சம்பந்தப்பட்டவர்கள் வாயிலாக அதிகாரபூர்வமாக ஊடகங்களுக்குச் சொல்லப்படும். ஆனால், இத்தகைய போலியான தகவல்களை அதுவும் மிகவும் உணர்வுபூர்வமான விஷயத்தில் இணையம் வாயிலாக பரப்பப்படுவது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அஜித் ரூ. 5 கோடி கொடுக்க வில்லை என உறுதியாகியுள்ளது.