‘மாரி’மாறி வரிசையாகப் படங்களைக் கமிட் பண்ணி 2019ன் படுபிஸி ஹீரோவாகியிருக்கிறார் நடிகர் தனுஷ். 2018 முடியவே இன்னும் நாப்பச்சொச்ச நாட்கள் பாக்கி இருக்கும் நிலையில் 2019 ல் முடித்துத்தருவதாக இதுவரை 6 இயக்குநர்களுக்கு கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார் அவர்.

இந்த ஆண்டில் தனுஷ் கடைசியாக நடித்துக்கொண்டிருக்கும் படம் ‘மாரி2’. இதன் முதல் பாகம் தோல்வி அடைந்திருந்தாலும் ஒரு முரட்டுப் பிடிவாதத்துடன் இதில் இறங்கியிருக்கும் தனுஷ், அடுத்து வரிசையாக 6 படங்களை அறிவித்து மற்ற ஹீரோக்களின் வயிற்றெரிச்சலை சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறார்.

தனுஷ் அளவுக்கு பெரிய பிசினஸ் உள்ள ஒரு ஹீரோ ஒரு ஆண்டுக்கு தலா 100 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் கூட மூன்று படங்களுக்கு மேல் நடிக்கமுடியாது என்பதுதான் நிதர்சனம். இந்த நிலையில் இவருக்கு ஏன் இவ்வளவு ஆர்வக்கோளாறு அல்லது மற்ற 3 பேருக்கு அல்வா கொடுக்கும் முடிவுடனேயே இந்த படங்களை அறிவித்திருக்கிறாரா என்பது தெரியவில்லை.

அந்த ஆறு இயக்குநர்களின் பட்டியல் இதுதான். ‘ராட்சசன்’ பட இயக்குநர் ராம்குமார், ‘பரியேறும் பெருமாள்’ இயக்குநர் மாரி செல்வராஜ், மீண்டும் வெற்றிமாறன், மீண்டும் அண்ணன் செல்வராகவன், கார்த்திக் சுப்பாராஜ், மற்றும் இந்திப்பட இயக்குநர் ஆனந்த்.எல்.ராய்.