தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ ரிலீஸ் தேதி தவிர்க்க முடியாத காரணத்தினால் ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது என்று இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் - அமலா பால் ஆகியோரை வைத்து சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. இந்தப் படம் 2014-ஆம் ஆண்டு வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் தொடர்ச்சி.

பாலிவுட் நடிகை கஜோல், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில், சமுத்திரக்கனி, விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படம், தனுஷின் பிறந்தநாளான 28-ஆம் தேதி வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என செளந்தர்யா ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.