நடிகர் அஜித் மலேசியாவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற நிலையில், ரேஸ் தொடங்கிய மூன்று நிமிடத்திலேயே அஜித்தின் கார் பழுதாகி நின்றதால், அவர் பாதியிலேயே விலக வேண்டிய சூழல் வந்தது.
Ajith Car Repair in Malaysia Car Race : 2025 - 2026 ஆண்டுக்கான ASIAN LEMANS SERIES 3 நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மலேசியாவில் நடைபெற்ற கார் ரேஸில் நடிகர் அஜித் குமார் தலைமையிலான அணி களமிறங்கியது. அஜித் பங்கேற்கிறார் என்றதுமே அங்குள்ள ஸ்டேடியத்தில் உள்ள டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. அஜித் கார் ரேஸ் ஓட்டுவதை பார்க்க இன்று காலை முதலே ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். போட்டி தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே அஜித் அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது.
அஜித்தின் காரில் ரேடியேட்டர் பழுதானதால், அவரால் போட்டியை தொடர முடியாத சூழல் உருவானது. இன்று நான்கு மணிநேரம், நாளை நான்கு மணிநேரம் என நடைபெறும் இந்த போட்டியில், யார் அதிக தூரம் கார் ஓட்டி இருக்கிறார்கள் என்பதை வைத்து வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவர். தற்போது அஜித்தின் கார் ரிப்பேர் ஆகி உள்ளதால், அவர் இந்த போட்டியில் வெல்ல வாய்ப்பே இல்லை. இதனால் அவரைக் காண வந்திருந்த ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த கார் ரேஸில் கார் பழுதாகி நின்ற பின்னர் அஜித் பேட்டியும் அளித்துள்ளார்.
அஜித் சொன்னதென்ன?
அதில், கார் ரேஸில் இதெல்லாம் ஒரு அங்கம் தான். இருந்தாலும் இதில் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. ரேஸ் என்றால் இப்படி தான் இருக்கும். ஆனால் இந்த ரேஸில் இப்படி நடந்தது என்னை சோர்வடையச் செய்கிறது. ஆனால் எப்போதும் இன்னொரு போட்டி இருக்கு என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். நான் ரசிகர்களை மனதார நேசிக்கிறேன். இவ்வளவு தூரம் எங்களுக்காக வந்து வாழ்த்தி, ஆதரவு அளிப்பது எனக்கும் என்னுடைய அணியினருக்கும் மிகப்பெரிய ஊக்கமாக இருக்கிறது என பேசி உள்ளார் அஜித்.
அஜித்குமார் நிறுவனம் LMP 3 வகையிலான ரேஸ் காரை பயன்படுத்தியது. இந்த கார் ரேஸை பார்க்க ரசிகர்கள் மட்டுமல்ல திரைப்பிரபலங்களும் படையெடுத்து வந்திருந்தனர். அஜித்தின் பேவரைட் டைரக்டரான சிறுத்தை சிவா, அஜித் நடித்த கிரீடம் படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய், ஏகே 64 படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகை ஸ்ரீலீலா ஆகியோரும் இந்த ரேஸை காண வருகை தந்திருந்தனர்.


