கிராமிய மனம் கொண்ட பல பாடல்களை பாடி, புகழ்பெற்றவர் பறவை முனியம்மா. தற்போது வரை இவருடைய பாடலுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

தமிழகத்தை தாண்டி, வெளிநாடுகளிலும் கிராமத்து பாடல்களை பாடி ஒரு காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்தார். ஆனால், தற்போது இவரின் நிலை தலை கீழாக மாறியுள்ளது.

தன்னுடைய சிகிச்சைக்கு கூட உரிய பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார். மேலும் இவரின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், தன்னுடைய மாற்று திறனாளி மகனையும் பறவை முனியம்மா தான் கவனித்து வருகிறார்.

அவ்வப்போது , இவருடைய நிலையை பற்றி கேள்விப்பட்டு ரசிகர்கள் மற்றும் சில பிரபலங்கள் தொடர்ந்து இவருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள். 

மேலும் கடந்த 2015 ஆண்டு பறவை முனியம்மாவின் நிலைமை பற்றி கேள்வி பட்ட, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா,  முதலமைச்சர் வைப்பு நிதியில் இருந்து 6 லட்சம் பணம் ஒதுக்கீடு செய்தார். இதன் மூலம் பறவை முனியம்மாவிற்கு 6 ஆயிரம் ரூபாய் மாதம் தோறும் வட்டி கிடைக்கிறது. இதை வைத்து தான் பறவை முனியம்மா மற்றும் அவருடைய மகன் இருவரும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில்... பறவை முனியம்மா தொடர்ந்து ஒரு சில வருடங்களாகவே கண்ணீருடன் கோரிக்கை ஒன்றை, தமிழக அரசிடம் வைத்து வருகிறார். அதாவது, தற்போது தான் உடல் நிலை சரி இல்லாமல் இருப்பதால், தனக்கு பின் தன்னுடைய மகனுக்கு, தமிழக அரசு ஒதுக்கிய வைப்பு நிதி பணத்தில் இருந்து கிடைக்கும் வட்டி பணம் கிடைக்க வேண்டும் என்பது தான் அது. மனதை உருக்கும் விதத்தில் இருக்கும் இந்த கோரிக்கையை, தமிழக அரசு ஏற்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.