மலையாள சூப்பர் ஸ்டாருடன் முதல் முறையாக ஜோடி சேரும் நம்ம ஊரு ராசா... சோசியல் மீடியாவை தெறிக்கவிடும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்...!

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிடன் முதல் முறையாக ராஜ்கிரண் இணைந்து நடிக்கும் படத்தின் தமிழ் பதிப்பிற்கு‘குபேரன்’என பெயரிடப்பட்டுள்ளது. மெகா ஸ்டார் மம்முட்டியின் சூப்பர் டூப்பர் ஹிட் படமான ‘மாஸ்டர் பீஸ்’ படத்தை இயக்கிய அஜய் வாசுதேவ் தான்‘குபேரன்’ படத்தை இயக்குகிறார்.  குட்வில் எண்டர்டைன்மெண்ட் ஜோபி ஜார்ஜ் தயாரித்துள்ள இந்த படம், தமிழ், மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகியுள்ளது.மலையாளத்தில்‘ஸ்கைலாக்’ என்ற பெயரில் உருவாகி வரும் படத்தில் மம்முட்டிக்கு ஜோடி கிடையாது எனக்கூறப்படுகிறது.

‘குபேரன்’படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் கேரளாவில் நடைபெற்று வருகிறது. படத்தின் தமிழ் உரிமையை ராஜ்கிரணுக்கு சொந்தமான ரெட் சன் ஆர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம்‘என் ராசாவின் மனசிலே’,‘எல்லாம் என் ராசா தான்’,‘என்ன பெத்த ராசா’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளது. தமிழ் பதிப்பை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ள ராஜ்கிரண், தனது சம்பளத்திற்கு பதிலாக படத்தின் விநியோக உரிமையை வாங்கியுள்ளார். ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் நடித்த மீனா 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராஜ்கிரண் உடன் ஜோடி சேருகிறார். 

இன்று வெளியிடப்பட்டுள்ள ‘குபேரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  ரசிகர்களுடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ‘குபேரன்’போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராஜ்கிரண், படம் வெற்றி பெற ரசிகர்கள் ஆதரவளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், டிசம்பர் மாதத்தில் படம் ரிலீஸ் ஆகும் என்றும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மற்றும் தயாரிப்பாளராக தமிழில் பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்த ராஜ்கிரண், முதல் முறையாக மம்முட்டியுடன் ஜோடி சேர்ந்துள்ள படத்தை காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.