இந்திய திரைப்பட வரலாற்றில், ராஜ மவுலியின் பாகுபலி-2 மிகப்பெரிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. படம் வெளியான முதல் நாளிலேயே 100 கோடி  ரூபாய்க்குமேல் வசூலாகி, பழைய சாதனைகள் அனைத்தையும் முறியடித்துள்ளது.

பாகுபலி படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வசூலிலும் நல்ல சாதனை படைத்தது. சலிப்பு தட்டாத காட்சி அமைப்புகள், விறு விறுப்பான இயக்கம் போன்றவை அப்படத்தின் முக்கிய அம்சமாக பேசப்பட்டது.

இதனால், பாகுபலி-2 ம், சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு சற்றும் குறைவில்லாத வகையில், பாகுபலி-2 ஐயும் உருவாக்கி இருந்தார் ராஜமௌலி.

ஆனாலும், இந்தப்படம் வெளியாவதற்கு பல்வேறு தடைகளும் இருக்கத்தான் செய்தன. அவற்றை எல்லாம் கடந்து, நேற்று இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பாகுபலி-2 ரிலீஸ் ஆனது.

இதுவரை இல்லாத அளவு இந்தப்படம் இந்திய உள்பட உலகம் முழுவதும்  9 ஆயிரம் அரங்குகளில் ரிலீஸ் ஆனது. படத்தின் முதல்நாள் வசூல் குறித்து துல்லியமான தகவல் வரவில்லை எனினும், 100 முதல் 125 கோடி ரூபாய் வரை வசூல் ஆகி இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு வினாடிக்கு 12 டிக்கெட்டுகள் வீதம் நேற்று ஒரே நாளில், 33 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையானதாக கூறப்படுகிறது. படம் வெளியான ஒவ்வொரு திரை அரங்கிலும் 90 முதல் 95 சதவிகித அரங்குகள் நிரம்பி வழிந்துள்ளன.

இந்திய திரைப்பட வரலாற்றில் "டங்கல்" படம் முதல் நாளில் 29 கோடி வசூல் ஆனதும், "சுல்தான்: படம் 36 கோடி ரூபாய் வசூல் செய்ததுமே இதுவரை சாதனையாக இருந்தது.

இந்நிலையில், அந்த சாதனைகள் அனைத்தையும் முறியடித்து, பாகுபலி-2 ஒரே நாளில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

பாகுபலி படத்தின் மொத்த வசூல் 600 கோடி ரூபாயாகும். அந்த படத்தின் மொத்த வசூலை பாகுபலி-2 ஒரே வாரத்தில் முறியடித்து விடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.