கொரோனா ஊரடங்கு காரணமாக திரையுலகம் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. லாக்டவுனுக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டு, ஷூட்டிங் மீண்டும் தொடங்கப்பட்டாலும் சினிமாத்துறை மீண்டும் நல்ல நிலைக்கு வர பல மாதங்கள் பிடிக்கும் என்பதே உறுதியான தகவல். ஏற்கனவே நடிகர்கள் விஜய் ஆண்டனி தனது சம்பளத்தில் இருந்து 25 சதவீதத்தை குறைத்துக் கொண்டு தயாரிப்பாளர்கள் வயிற்றில் பால் வார்த்து உள்ளனர். அந்த வரிசையில் முதன் முறையாக இயக்குநர்களிலேயே ஹரி தனது சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஹரி, சூர்யாவை வைத்து இதுவரை 5 படங்களை இயக்கியுள்ளார். 6வது முறையாக அருவா படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா பிரச்சனைக்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. 

தயாரிப்பாளர்களின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையை புரிந்து கொண்டு தனது “அருவா” பட சம்பளத்தில் இருந்து 25 சதவீதத்தை குறைத்துக்கொள்வதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து இயக்குநர் ஹரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "வணக்கம்... இந்த “கொரோனா” பாதிப்பால் நம் திரையுலகம் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளது , நம்முடைய  “தயாரிப்பாளர்கள்” நன்றாக இருந்தால்தான் நம்  “தொழில்” மறுபடியும் நல்ல நிலைக்கு திரும்பும். இந்த சூழலை மனதில் கொண்டு, நான் அடுத்ததாக இயக்கப்போகும் "அருவா" திரைப்படத்திற்கு என்னுடைய சம்பளத்தில் இருபத்து ஐந்து சதவிகிதம் (25%) குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளேன்" என கூறியுள்ளார். ஹரியின் இந்த அறிவிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.