2017ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம்  "அர்ஜுன் ரெட்டி". விஜய் தேவரகொண்டா நடித்திருந்த இந்த படத்தை அறிமுக இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார். முதற்கட்டமாக இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட ‘கபீர் சிங்’ திரைப்படம் மாஸ் ஹிட் அடித்துள்ளது. ஷாஹித் கபூர், கீரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. 

இதையடுத்து அந்தப் படத்தை "வர்மா" என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. முதலில் இயக்குநர் பாலா இயக்குவதாக இருந்த படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது. அதன் பின்னர் "ஆதித்யா வர்மா" என்ற பெயரில் எடுக்கப்பட்டது. சீயான் விக்ரமின் மகன் துருவ், அவருக்கு ஜோடியாக பனிதா சந்து மற்றும் ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது.

 

ஆதித்யா வர்மா ரிலீஸ் ஆன முதல் நாளே தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தியேட்டர்கள் ஹவுஸ் புல் ஆனதாக கூறப்படுகிறது. மாஸ் ஹீரோக்களான விஜய், அஜித் படத்திற்கு எப்படி ஃபர்ஸ்ட் டே,ஃபர்ஸ்ட் ஷோ ஓப்பனிங் இருக்குமோ. அதே போன்று துருவ் விக்ரமின் முதல் படத்திலேயே அவருக்கு ரசிகர்கள் மாஸ் ஓப்பனிங் கொடுத்துள்ளனர். ட்விட்டர் ட்ரெண்டிங், தியேட்டர்களில் ரசிகர்கள் பட்டாளத்தின் கொண்டாட்டம் என முதல் படத்திலேயே தெறிக்கவிட்டுள்ளார் குட்டி சீயான். 

புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பதை நிரூபித்துள்ள துருவ் விக்ரம், வசூலிலும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து மாஸ் காட்டியுள்ளார். "ஆதித்யா வர்மா" படம் சென்னையில் மட்டும் முதல் நாளிலேயே 34 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதனால் தமிழ்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார் துருவ் விக்ரம். படத்திற்கான ஆரம்ப வரவேற்பை பார்க்கும் போது, கண்டிப்பாக விஜய், அஜித் சாதனைகளை கூட துருவ் விக்ரம் முறியடிப்பார் என்று கூறப்படுகிறது.