’தளபதி 63’ படத்துக்காக மீனம்பாக்கம் பின்னி மில்லில் போடப்பட்ட செட்டில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தின்போது படப்பிடிப்புக் குழுவினர் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை.

சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில்  ‘தளபதி 63’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட் ஒன்றிலிருந்த ராட்சத விளக்கு  விழுந்ததில், செல்வராஜ்   என்ற  எலெக்ட்ரிஷியன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர்  அருகிலுள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து எலெக்ட்ரிஷியன் செல்வத்தை நேரில் சென்று நலம் விசாரித்தார் நடிகர் விஜய். 
இந்நிலையில் கால்பந்தாட்டக் காட்சிகள் இல்லாத பகுதிகளை ஷூட் செய்வதற்காக மீனம்பாக்கம் பின்னி மில்லில் ரூ 50 லட்சம் ரூபாய் செலவில், வீடுகள், வங்கி, தேவாலயம் உள்ளிட்டவற்றுடன் சுமார் 63 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், இன்று பிற்பகலில் அங்கு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 

சருகுகள் மற்றும் காய்ந்த செடி கொடிகள் காரணமாக தீ வேகமாகப் பரவி அரங்குகளை சூழ்ந்து கொண்டது. தகவல் அறிந்து தாம்பரம், கிண்டி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி வீரர்கள் தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் லட்சக்கணக்கிலான ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகள், ஜெனரேட்டர் ஆகியவை எரிந்து நாசமாகின.அங்கு இன்று படப்பிடிப்பு நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். தீவிபத்து குறித்து மீனம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.