நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதமர் நரேந்திரமோடிக்கு பகிரங்க கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம் நடிகை அபர்ணா சென் உட்பட 50 பேர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் சுமார் 50 பிரபலங்கள் ஒன்று சேர்ந்து பிரதமர் நரேந்திரமோடிக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதி அதை ஊடகங்களுக்கும் வழங்கியிருந்தனர். அக்கடிதத்தில்,...நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்து வருகிறது. சிறு பான்மையினருக்கும் இஸ்லாமியர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. ‘ஜெய் ஸ்ரீராம்’என்கிற கோஷம் போர் முனையில் எழுப்பப்படுவது போல் இருக்கிறது. இது நமது இந்திய ஜனநாயகத்துக்கு எதிரான குரலாக இருக்கிறது என்று எழுதியிருந்தனர்.

அக்கடிதத்தில் இயக்குநர் மணிரத்னம், நடிகையும் இயக்குநருமான அபர்ணா சென், இயக்குநர் அனுராக் காஷ்யப், இயக்குநர் ஷ்யாம் பெனகல் ஆகியோர் உள்ளிட்ட 49 பேர் கையெழுத்திட்டிருந்தனர். அக்கடிதம் ஊடகங்களில்  பரபரப்பான செய்தியாக வெளியானது.

இந்நிலையில் அக்கடிதத்தை எழுதிய தேசிய நலனுக்கு எதிரானது என்றும் அது தேசத்தின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் உண்டாக்குகிறது என்றும் பீஹார் முசாப்பர்பூரைச் சேர்ந்த வக்கீல் சுதிர் குமார் ஓஜா வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யா கண்ட் திவாரி கடிதம் எழுதிய அவர் அனைவரும் குற்றவாளிகளே என்று தீர்ப்பளித்தார். அப்வரது தீர்ப்பை ஏற்று பீகார் சதார் காவல் நிலையத்தில் மணிரத்னம் உள்ளிட்ட அனைவர் மீதும் தேச துரோக வழக்கு பாய்ந்துள்ளது.