பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி, கடந்த வாரம் 23 ஆம் தேதி துவங்கியது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பு இரண்டாவது சீசனுக்கு கிடைக்க வில்லை என்றாலும், மூன்றாவது சீசன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில், தற்போது வரை 16 பிரபலங்கள் கலந்து கொண்டு, விளையாடி வருகிறார்கள். போட்டியாளர்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, அன்பாக பழகி வருகிறார்கள்.

குறிப்பாக, செய்திவாசிப்பாளர் பாத்திமா பாபுவை அனைவரும் அம்மா என்றே அழைக்கிறார்கள். மேலும் இவருக்கென ஆர்மியும் துவங்கப்பட்டு, இவரை பற்றிய புகைப்படங்கள் போன்ற வற்றை ரசிகர்கள் சிலர் வைரலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர் ஒரு நடிகை, செய்திவாசிப்பாளர், என அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இவர் எங்கு பிறந்தார் என்பது குறித்த தகவல்கள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. "மலையாளியான பாத்திமா பாபு பிறந்து வளர்ந்தது எல்லாம் புதுச்சேரி யூனியன் பிரதேசம் தான்" .

ஆரம்பத்தில், தூர்தசன் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக தன்னுடைய பணியை துவங்கினார். இவரின் தெளிவான தமிழ் உச்சரிப்பும், அழகும் இவரை மற்றொரு தளத்திற்கு கொண்டு சென்றது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்திவாசிப்பாளராக மாறினார். பின் வெள்ளித்திரையில் இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய 'கல்கி' படத்தில் 1996 ஆம் ஆண்டு ஒரு நடிகையாக அறிமுகமானார். 

இதைத்தொடர்ந்து, நேருக்கு நேர், நீ வருவாய் என, நினைவிருக்கும் வரை, குசேலன், உள்ளிட்ட 30 க்கும் அதிகமான படங்களில் நடித்தார். தமிழ் மட்டும் இன்றி பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அதே போல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார்.தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்களுக்கு பிடித்த போட்டியாளராகவும் மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.