’பார் கோடு இருக்கிறவன் மட்டுமே இனி உன் படத்தை பார்த்தா போதுமா தலைவா! ப்ரொடக்‌ஷன் தரப்பு ஷூட்டிங்ல போட்ட சாப்பாடு செலவை கூட திரும்ப எடுக்க முடியாது பரவாயில்லையா?’ _ அடையாள அட்டை கிடைக்காத ரசிகன் ரகளையாக கேட்கிறான் ரஜினிகாந்தை பார்த்து. 

ரஜினி எதைச் செய்தாலும் அதன் பின்னே ஒரு சுயநல கணக்கு இருக்குமென்பது அவரது நெடு நாள் ரசிகனுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் உணர்வு ரீதியாக அவரது ரசிகனாக கமிட் ஆனவன், விசுவாசத்தை மாற்றாமல் அப்படியே இருக்கிறான். 

ரஜினியிடம் ரசிகன் பெரிதாக எதிர்பார்க்கும் விஷயம்  ஒன்றுதான். அது, அடிக்கடி இல்லாவிட்டாலும் பரவாயில்லை அவ்வப்போதாவது தன் முகத்தை ரசிகனுக்கு அவர் நேரில் காட்ட வேண்டும் என்பதுதான். அந்த வகையில் பல ஆண்டு போராட்டத்துக்கு பிறகு கடந்த மாதம் ரசிகர்களை நேரில் சந்திக்க முடிவெடுத்த ரஜினி, அவர்களுடன் புகைப்படம் எடுக்கவும் சம்மதித்தார். ஆனால் அதில் ஏக குழப்பங்கள். எக்கச்சக்கமாக பரவியிருக்கும் ரசிகர் மன்றத்தில் எத்தனை பேரை சந்திப்பது, குரூப் போட்டோவா அல்லது தனித்தனியாகவா? இதையெல்லாம செய்து முடிக்க எத்தனை நாட்கள் தேவைப்படும்? இதிலேயே பல நாட்கள் போய்விட்டால் தன் வேலையை யார் பார்ப்பது?...என்று பல வித சிந்தனைகள். 

இதற்கிடையில் ரஜினியுடன் புகைப்படம் எடுக்க வைக்கிறேன் என்று சொல்லி மன்ற நிர்வாகிகள் சிலர் உறுப்பினர்களிடம் பத்தாயிரம், இருபதாயிரம் என கல்லா கட்டுவதாக ஒரு புகார் வெடித்தது. இதையெல்லாம் கூட்டிக் கழித்த ரஜினி கடைசி நேரத்தில் இந்த ப்ராஜெக்டையே கைவிட்டார். 

இந்நிலையில் திடீரென்று மே 15_ம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்க சம்மதித்திருக்கிறார் அவர். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு முதலில் மகிழ்ச்சியை தந்தாலும் கூட, பின்னர் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அவர்களை ஷாக் ஆக்கியிருக்கிறது. 

* பார் கோடு அடையாள அட்டை வழங்கப்பட்டு, அதை வைத்திருப்பவர்கள் மட்டுமே தலைவரை சந்திக்க முடியும்.
*    அடையாள அட்டை இல்லாத ரசிகர்களுக்கு மண்டபத்தின் உள்ளே அனுமதியே கிடையாது.
*    ரஜினிக்கு மலர்கொத்து கொடுக்க தடை.
*    ரஜினியிடம் மனு எதுவும் கொடுத்து உதவி பெறும் முயற்சியிலெல்லாம் இறங்க கூடாது.

என்று நீளும் கட்டளைகளில் ஆறுதலாக ‘தலைவரின் காலில் யாரும் விழக்கூடாது’ என்று தமிழ் ரசிகர்களின் தன்மானத்தை காப்பாற்றும் விஷயத்தையும் இணைத்திருந்தார்கள். 

இந்நிலையில் பார் கோடு உடன் கூடிய அடையாள அட்டை தங்களுக்கு வரவில்லை என்று எக்கச்சக்க ரசிகர்கள் ஏக எரிச்சலில் இருக்கிறார்கள். ‘தலைமை ரசிகர் மன்ற நிர்வாகிகள் சில உள்குத்துகளை செய்து சிலருக்கு மட்டும் அடையாள அட்டை வாங்கிக் கொடுத்துள்ளனர்.

பார் கோடு அட்டை வெச்சிருக்கிறவங்க மட்டும்தான் வரணுமாம். அப்போ அந்த அடையாள அட்டை கிடைச்சவங்க மட்டுமே இனி தலைவரோட படத்தை பார்த்தா போதும்தானே? போஸ்டர் ஒட்டவும், கட் அவுட் கட்டவும், பால் அபிஷேகம் பண்ணவும், ஐநூறு ஆயிரம்னு கொட்டி படத்தை பார்க்கவும் மொத்தத்துல அவரோட ரேட்டிங்கை ஏற்ற மட்டும் எந்த பிரிவினையுமில்லாம எல்லா ரசிகனுங்களும் வேண்டும். 

ஆனால் அவரை சந்திக்கணும்னா மட்டும் அடையாள அட்டை கொடுத்து வடிகட்டுவாங்களா? பார்கோடு அட்டை வெச்சிருக்கிற எண்ணிக்கை மட்டுமே இனி அவர் படத்தை பார்க்கட்டும், அப்போதான் அவரை வெச்சு படமெடுக்கிற தயாரிப்பு தரப்புகளுக்கு கை சுடும்...இல்ல இல்ல வெந்து போகும். ஷூட்டிங் சமயத்துல போடப்பட்ட சாப்பாட்டு செலவுக்கான காசை கூட எடுக்க முடியாது. 

தலைவர் அரசியலுக்கு வரணும், ஆளணும் அப்படின்னு சொல்லி நாங்க போஸ்டர் அடிச்சப்ப அது தேனா இருந்துச்சு. ஆனா குறையை சொல்லி அவர்கிட்ட மனு கொடுக்க நினைச்சா மட்டும் கசக்குதோ? இருக்கட்டும்.” என்று கருவிக் கொண்டுள்ளனர். 

இத்தோடு நில்லாமல் ‘ரசிகர்களை சந்திக்கிற திட்டத்தை தலைவர் திடீர்னு அறிவிக்க காரணம்?...வயசு வித்தியாசம் ரசிக வித்தியாசமில்லாம குடும்பம் குடும்பமா மறுபடி மறுபடி பாகுபலி 2 படத்தை பார்த்து வசூலை அள்ளிக் கொட்டுறாங்களே அந்த பரபரப்புல எங்கே தன்னோட இடம் காணாம போயிடுமோன்னு பயந்து இந்த திடீர் முடிவை எடுத்தாரா? 

இல்ல, ரசிகர் மன்றங்களையே கலைச்சு தன் தொழில்ல நேர்மையாகவும், சுயநலமில்லாமலும் நடந்து எக்கச்சக்க ரசிகர்களோட வரவேற்பை பெற்று வெச்சிருக்கிற அஜித்தின் விவேகம் பட டீஸர் உருவாக்கியிருக்கிற பரபரப்பை பார்த்து ஷாக் ஆகி இந்த முடிவை எடுத்தாரா? சும்மா ஆடாதேய்யா தலைவரின் பின் தலை முடி?” என்று நக்கலா சிரிக்கிறார்கள்.