இசை துறையில் தன்னுடைய இன்றியமையாத இசையின் மூலம், பல ரசிகர்களை கவர்ந்து, தேசிய விருது, கிராமி விருது, பிலிம் பேர் விருது, மற்றும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கார் விருது வரை வாங்கி குவித்திருக்கும், இசை புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு முதல் முதலில் இசையமைக்க வாய்ப்பு கொடுத்த, மூத்த இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன் வயது மூப்பு மற்றும் உடல் நல பிரச்சனை காரணமாக காலமானார்.

85 வயதாகும் இவர், 200 க்கும் அதிகமான பல மலையாள படங்களுக்கு இசையமைத்துள்ளார். குறிப்பாக மலையாள திரையுலகில் உள்ள, முன்னணி பாடகர்களான, யேசுதாஸ் உள்ளிட்ட பலருக்கு பாட வாய்ப்பு கொடுத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல், கடந்த 1981ஆம் ஆண்டு அர்ஜுனன் தான் இசையமைத்த ’அடிமச்சங்கலா’  என்கிற மலையாளப் படத்தில்  கீ போர்டு வாசிக்க ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு வாய்ப்பு அளித்தார். 

ஏ.ஆர்.ரகுமான் இசை பயணத்தில் இன்றியமையாத ஒரு மனிதராக எப்போதும் அவருடன் இருந்திருக்கிறார், எம்.கே.அர்ஜுனன். அதனால் ஏ.ஆர்.ரகுமானுக்கு இவர் மீது எப்போதுமே அளவு கடந்த மரியாதை உள்ளது.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே, வயது மூப்பு மற்றும் உடல் நல பிரச்சனைகள் காரணமாக அவதிப்பட்டு வந்த இவர், காலமானார். இவருடைய மறைவிற்கு கேரள முதலமைச்சர் பினாரயி விஜயன் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

மேலும் மலையாள பிரபலங்கள் பலரும் இவருக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இவருக்கு கடந்த 2018 ஆண்டு, கேரள ஸ்டேட் அவார்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.