தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்தது மட்டுமின்றி பல்வேறு வெற்றிப்படங்களை தயாரித்தவருமான கிருஷ்ணா உடல்நலக்குறைவால் காலமானார்.

தெலுங்கு திரையுலகில் வில்லன் நடிகராக கலக்கியவர் கிருஷ்ணா. இவர் கடந்த 1991-ம் ஆண்டு பாரத் பந்த் என்கிற தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமானார். அதற்கு முன்புவரை ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்த கிருஷ்ணாவை நடிக்க வைத்தது இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா தான். அவர் அறிமுகப்படுத்தியதை அடுத்து கிருஷ்ணாவுக்கு தொடர்ந்து வில்லன் வாய்ப்புகள் குவிந்து வந்தன.

இதையடுத்து தெலுங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்து அசத்திய கிருஷ்ணா, தயாரிப்பாளராகவும் பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இன்று தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜுவை சினிமாவில் வளர்த்துவிட்ட பெருமையும் கிருஷ்ணாவையே சேரும். 

இதையும் படியுங்கள்... தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா... தியேட்டர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது சுகாதாரத்துறை

அதுமட்டுமின்றி மாதாசு கிருஷ்ணா என்கிற இயற்பெயர் கொண்ட இவர், என்டிஆர், நாகேஸ்வர ராவ், சிரஞ்சீவி, ஜெயசுதா, ஜெயப்பிரதா, ஸ்ரீதேவி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்துள்ளார். இப்படி நடிகர், தயாரிப்பாளர், ஆடை வடிவமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்த கிருஷ்ணா நேற்று காலமானார். அவருக்கு வயது 88.

வயதுமூப்பு காரணமாக சென்னையில் சிகிச்சை எடுத்து வந்த கிருஷ்ணா, நேற்று மரணமடைந்தார். நடிகர் கிருஷ்ணாவின் மறைவால் தெலுங்கு திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... இந்திய மைக்கேல் ஜாக்சனுக்கு இன்று பிறந்தநாள்... நயன் செய்த சம்பவத்தால் டோட்டலாக மாறிய பிரபுதேவாவின் வாழ்க்கை