குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலமான அசாமில் தொடங்கிய போராட்டம், தற்போது நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. டெல்லி, மேற்குவங்கம், கர்நாடகா, தமிழகம் என பல்வேறு மாநிலங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்திற்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்தாலும், எதிரான கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் எழுந்து கொண்டே தான் இருக்கின்றன.

சமீபத்தில் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், மாணவர்கள் விடுமுறைக்காகவும், பெண்களை சைட் அடிப்பதற்காகவும் தான் போராட்டத்தில் கலந்து கொள்வதாக கருத்து தெரிவித்தார். மாணவர்களின் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஒய்.ஜி.மகேந்திரனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. 

இந்நிலையில், ஒய்.ஜி. மகேந்திரன் பேச்சுக்கு பிரபல பாடகி சின்னமயி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சின்மயி,  "இந்த மனுஷன் கருத்தை நாம் எல்லோரும் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட வேண்டும். அவர்களை திருத்த முடியாது. அதேபோல நமக்கு நேர விரயம்" என்று கடுமையாக சாடியுள்ளார். பாடகி சின்மயின் இந்த பதிவிற்கு ஏராளமானோர் தங்களது ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.