பிரபல இந்துஸ்தானி பாடகர் பிரபாகர் கரேக்கர் காலமானார்
புகழ்பெற்ற இந்துஸ்தானி பாடகரான பிரபாகர் கரேக்கர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.

பாரம்பரியமிக்க இந்துஸ்தானி இசையில் புகழ்பெற்று விளங்கியவர் பண்டிட் பிரபாகர் கரேக்கர். இவர் மும்பையில் உள்ள சிவாஜி பார்க் பகுதியில் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வந்தார். 80 வயதான இவர் சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு பிரபாகர் கரேக்கரின் உடல்நிலை மோசமாக அவர் உயிர் பிரிந்தது.
பாடகர் பிரபாகர் கரேக்கரின் மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பிரபாகர் கரேக்கரின் மறைவு இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் இந்துஸ்தானி பாரம்பரிய இசை மற்றும் பக்தி பாடல்களில் அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும் என அவரது மறைவுக்கு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... மறைந்த மகள் பவதாரிணியின் கடைசி ஆசையை நிறைவேற்றும் இசைஞானி இளையராஜா!
"போலவ விட்டல் பஹவ விட்டல்", "வக்ரதுண்ட மகாகே" உள்ளிட்ட பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார் பிரபாகர் கரேக்கர். மராத்தி மொழியில் ஏராளமான பக்தி பாடல்களுக்கு தன்னுடைய சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளார். கோவாவில் பிறந்த பிரபாகர் கரேக்கரின் பாடல்கள் அகில இந்திய வானொலியில் பரவலாகக் கேட்கப்பட்டது. அவர் தனது தனித்துவமான பாணியில் இந்துஸ்தானி பாரம்பரிய இசையை வழங்கியதால் புகழ் பெற்றார்.
சங்கீத நாடக அகாடமி விருது, தான்சேன் சம்மான், கோமந்த் விபூஷண் விருது போன்ற பல மதிப்புமிக்க விருதுகளைப் பண்டிட் பிரபாகர் கரேகர் பெற்றிருக்கிறார். அவரின் மறைவு இசை உலகில் ஒரு பேரிழப்பாக கருதப்படுகிறது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை மும்பையில் உள்ள தாதர் தகன மையத்தில் பிரபாகர் கரேக்கரின் உடன் தகனம் செய்யப்பட உள்ளது.
இதையும் படியுங்கள்... பாடல் உரிமை வழக்கு - இசைஞானி இளையராஜா நீதிமன்றத்தில் ஆஜர்

