மதுரை மாவட்டம் பரவை கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மா. நாட்டுப்புறப் பாடகி ஆன இவர் தூள் படத்தில் வரும் 'சிங்கம் போல' என்கிற பாடல் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார். அதன்பிறகு 25க்கும் மேற்பட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். தமிழக அரசின் ‘கலைமாமணி‘ விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற அவர், கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தில் கடைசியாக நடித்திருந்தார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. 83 வயதான இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கடும் அவதியுற்றார். சிறுநீரக கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்து தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். 

வறுமையில் வாடிய அவரிடம் சிகிச்சைக்கு போதுமான பணம் இல்லை என்ற செய்தி அறிந்து நடிகர் சங்கம் உட்பட திரையுலகைச் சேர்ந்த பலரும் உதவி செய்து இருந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் மதுரையில் இருக்கும் அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவு திரைத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலையில் அவரது இல்லத்தில் இறுதிச் சடங்குகள் நடக்கும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.