தெலுங்கு திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சுனில், 2006ம் ஆண்டு அந்தாலா ராமுடு என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன் பின்னார்  ராஜமெளலி இயக்கத்தில் மரியாத ராமண்ணா என்ற படத்திலும் கதாநாயகனாக அசத்தினார். ஆனால் அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காததால், மீண்டும் நகைச்சுவை நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கினார். 

தற்போது ரவி தேஜா நடிப்பில் உருவாகி வரும் டிஸ்கோ ராஜா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நாளை திரைக்கு வர உள்ள நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக சுனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நேற்றிரவு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சுனில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரல் தொற்று நோய்  மற்றும் காய்ச்சல் இருப்பதாகவும், அதற்கான தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சுனில் சுவாசிப்பதற்கு சற்று சிரமப்படுவதால், சுவாச குழாய் மூலம் ஆக்ஸிஜன் செலுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சுனில் விரைவில் குணமடைவார் என்றும், இருப்பினும் சில வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுனிலின் இந்த பரிதாப நிலையை கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.