அமெரிக்காவின் பிரபல இசைக்கலைஞரும், நடிகையுமான மைலே சைரஸ். டிஸ்னி சேனலின் முக்கிய தொடர்களில் ஒன்றான ஹன்னா மோன்டனா மூலம் சைரஸ் பிரபலமானார். 2008ம் ஆண்டு வெளியான போல்ட் திரைப்படத்திலும் நடித்தார் சைரஸ். 2013ம் ஆண்டு மேசிம் என்ற பத்திரிகை நடத்திய கணக்கெடுப்பின் படி உலகின் கவர்ச்சிகரமான பிரபல யார் என்ற பட்டியலில் முதலிடம் பிடித்தார். 

இப்படி அடுக்கடுக்கான புகழுக்கு சொந்தக்காரியான மைலே சைரஸ், சமீபத்தில் நடந்துமுடிந்த கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ளாததும், அதே சமயம் அவரது தந்தை பில்லி ரே சைரஸ், சகோதரி நோவா சைரஸ் ஆகியோர் கலந்துகொண்டதும், மிலேவின் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தி அடையச் செய்துள்ளது. இது குறித்து, 2013ஆம் ஆண்டின் விருது வழங்கும் விழா ஒன்றில், கஞ்சா மீதான தனது காதலை வெளிப்படுத்திய நிகழ்வு ஒன்றை நினைவுகூர்ந்தும், இதனால் தான் கிராமி விருதுகளில் புறக்கணிக்கப்பட்டதாகவும் மறைமுகத் தகவல் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைரஸ் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து விருது விழா ஒன்றில் தான் கஞ்சா புகைக்கும் காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ள அவர், தான் இதனால் விருது விழாக்களுக்கு அழைக்கப்படுவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மைலேவின் இந்தப் பதிவைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும்விதத்தில், ஆதரவான கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.