ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என எவ்வித பாகுபாடும் பார்க்காமல் திரைப்பிரபலங்களை கொரோனா வைரஸ் வாட்டி வதைத்து வருகிறது. பாலிவுட்டின்  Big B-யான அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் தற்போது மெல்ல மெல்ல திரைத்துறையில் பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நிக்கி கல்ரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 


நடிகை நிக்கி கல்ராணிக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. வேலைன்னு வந்துட்டால் வெள்ளக்காரன், மரகத நாணயம், டார்லிங் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிக்கி கல்ராணி. தனக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது குறித்து சோசியல் மீடியாவில் அறிவித்துள்ள அவர், “அனைவருக்கும் வணக்கம், நான் கடந்த வாரம் மேற்கொண்ட பரிசோதனையில் எனக்கு கரோனா இருப்பது உறுதியானது. எனது அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். மோசமான தொண்டை, காய்ச்சல், வாசனை மற்றும் சுவை இழப்பு போன்ற வழக்கமான அறிகுறிகளுடன் எனக்கு ஒரு லேசான பாதிப்பு இருந்தது. இருப்பினும், தேவையான அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி நான் நன்றாக குணமடைகிறேன். வீட்டிலேயே தங்கி தனிமையில் இருப்பதை நான் அதிர்ஷ்டசமாக நினைக்கிறேன்”

“இப்போது அனைவருக்கும் இது மிகவும் மோசமான நேரம் என்று எனக்குத் தெரியும். நாம் பாதுகாப்பாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் மற்றவர்களின் பாதுகாப்பை பற்றியும் சிந்திக்க வேண்டும். எனது வயது, எனக்கு முன்பு எந்த பிரச்னையும் இல்லாததால், நான் விரைவில் குணமடைவேன் என்று எனக்குத் தெரியும். ஆனால் எனது பெற்றோர், பெரியவர்கள், எனது நண்பர்கள் மற்றும் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய அனைவரையும் நினைக்கும் போது அது என்னை பயமுறுத்துகிறது. எனவே தயவுசெய்து முகமூடியை அணியவும், சமூக விலகலை கடைபிடிக்கவும், உங்கள் கைகளை தவறாமல் கழுவவும் மற்றும் வெளியே செல்ல வேண்டாம். உங்கள் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுங்கள், உங்கள் நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள், கவலை அல்லது மனச்சோர்வடைந்தால் தயவுசெய்து உதவியை மற்றவர்களிடம் கேளுங்கள். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்” என கூறியுள்ளார்.