சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியில் நடிகை கவுதமி கலந்து கொண்டது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதன் முதலில் சந்தேகம் எழுப்பியது நடிகை கவுதமி தான். முதலமைச்சராக ஓபிஎஸ் இருந்த போதே ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பிரதமருக்கு கடிதம் எழுதினார் கவுதமி. அதன் பிறகு அதிமுக இரண்டாக உடைந்து ஓபிஎஸ் ஜெ. மரண விவகாரத்தை கையில் எடுத்த பிறகு கவுதமி காணாமல் போனார்.

இந்த விஷயத்தில் பாஜக பிரமுகர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் தான் கவுதமி பிரதமருக்கு கடிதம் எழுதியதாக கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் மோடியை நேரில் சந்தித்து பேசிவிட்டு வந்தார் கவுதமி. அப்போதே அவர் பாஜகவில் இணைவார் என்று பேசப்பட்டது. ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் ஆர்வம் காட்டினார். ஆனால் அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியடையவில்லை.

இந்த நிலையில் சென்னையில் நேற்று பாஜக முப்பெரும் விழா நடைபெற்றது. தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மோடிக்கு பாராட்டு, காந்தி 150வது பிறந்த நாள் விழா, ஒற்றுமை ஓட்டம் என நடைபெற்ற இந்த விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அவரோடு நடிகை கவுதமியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தான் ஹைலைட்.

பாஜக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கவுதமி பங்கேற்றதாக சொல்லப்பட்டது. ஆனால் அவர் கட்சியில் இணைந்துவிட்டதாக சிலர் கூறினர். விசாரித்த போது தற்போது வரை பாஜகவில் இணையவில்லை என்று மட்டும் கதவுமி கூறியுள்ளார். ஆனால் விரைவில் அவர் பாஜகவில் இணைய உள்ளதாகவும் முதற்கட்டமாக அவருக்கு பாஜக செய்தி தொடர்பாளர் பதவி கொடுக்கப்படும் என்கிறார்கள்.