தளபதி போட்ட உத்தரவு.. புஸ்ஸி ஆனந்திடம் ஆசி பெற்று.. த.வெ.க-வில் இணைந்தார் தாடி பாலாஜி!
Thadi Balaji : பிரபல நடிகர் தாடி பாலாஜி பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அலுவலகத்தில் பொதுச் செயலாளர் ஆனந்தின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
தளபதி விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்த பல முன்னெடுப்புகளை தொடர்ச்சியாக செய்து வந்தார். குறிப்பாக 10-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை, மாணவிகளை நேரில் அழைத்து அவர்களுக்கு பாராட்டு பத்திரமும், உதவித் தொகையும் அவர் அளித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக கல்வி சார்ந்த பல விஷயங்களில் அவருடைய ரசிகர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்த நிலையில் தான், இந்த ஆண்டின் துவக்கத்தில் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவிப்பை அவர் வெளியிட்டார். ஏற்கனவே அக்கட்சியின் கொடியும், பாடலும் வெளியான நிலையில் வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் த.வெ.க கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு அந்த மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சியானது அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. 3 மதங்கள் ஒருங்கிணைந்த சடங்குகளுடன் அந்த விழா நடைபெற்றது. தொடர்ச்சியாக தங்களுடைய மாநாடு குறித்த பல அறிக்கைகளை த.வெ.க கட்சியினர் வெளியிட்டு வருகின்றனர்.
குறிப்பாக வெளியூரிலிருந்து வாகனங்களில் வரும் தமிழக வெற்றிக் கழக கட்சியினர், தாங்கள் வரும் வாகனத்தில், பயணிகள் பயணிக்க அளிக்கப்பட்டுள்ள வரம்பை கடைபிடித்து அந்த அளவிலான நபர்கள் மட்டுமே பயணிக்க வேண்டும். இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். அவர்கள் மாநாட்டிற்காக வரும் வழியில் பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் தங்களுடைய கட்சியினரால் ஏற்படக்கூடாது.
மாநாட்டை சுற்றியுள்ள இடங்களை மிக தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று பல கட்டளைகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றனர். அதேபோல தளபதி விஜய் தன்னுடைய கட்சியினருக்கு அண்மையில் ஒரு அறிவிப்பையும் வெளியிட்டார் அதில் "இந்த மாநாடு குறித்து நம்மிடம் உற்சாகம் இருக்கலாம், கொண்டாட்டம் இருக்கலாம், குதூகலம் இருக்கலாம். ஆனால் படையினர் ஓர் இடத்தில் கூடினால் அந்த இடம் கட்டுப்பாடு மிக்கதாக மட்டும் இல்லாமல் பக்குவம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதை நாம் நிரூபித்து காட்ட வேண்டும்".
"இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா? களத்தில் தொடர்ச்சியாக நின்று வென்று காட்ட இயலுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளை நம் மீது வீசுவதில் அதிக விருப்பங்களை சிலர் கொண்டிருக்கின்றனர்/ இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டும் போதுதான் அவர்களுக்கு புரியும் தமிழக வெற்றிக் கழகம் ஏதோ பெயருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அல்ல என்று" என கூறியிருக்கிறார்.
இந்த சூழலில் தொடர்ச்சியாக பல நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள் தளபதி விஜய்க்கு வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில் தளபதி விஜயுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்த பிரபல நடிகர் தாடி பாலாஜி தற்பொழுது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து இருக்கிறார். பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், பொதுச் செயலாளர் ஆனந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்று கட்சியில் இணைந்து இருக்கிறார் தாடி பாலாஜி. மேலும் பல நடிகர்கள் அக்கட்சியில் இணை உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.