கடந்த இரண்டு மாதங்களாகவே வாரம் ஐந்து முதல் எட்டுப் படங்கள் வரை தொடர்ந்து படங்கள் குவிந்துவந்தாலும் 2019ல் வெளியாகும் சின்ன பட்ஜெட் படங்கள் பெரும்பாலும் தோல்வியையே சந்தித்து வருவதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.    

கடந்த வாரம் ஐந்து தமிழ்ப் படங்கள் வெளியாகி வந்துபோன சுவடுகள் இல்லாத  நிலையில் இந்த வாரம் ஏழு தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.
’அகவன்’, ’ஜூலை காற்றில்’, ’இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ’கிருஷ்ணம்’, ’நெடுநல்வாடை’, ’கில்லி பம்பரம் கோலி’, ’பதனி’ ஆகிய ஏழு படங்களும் மார்ச் 15 அன்று வெளிவரவுள்ளன. இவற்றில் பிக் பாஸ் புகழ் ஹரீஸ் நடித்திருக்கும் ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ தவிர்த்து அத்தனையும் புதுமுகங்கள் நடித்த படங்கள்.

இதே நிலை நீடித்தால் மார்ச் மாதத்தில் மட்டுமே சுமார் 25 முதல் 30 சின்ன பட்ஜெட் படங்கள் ரிலீஸாகும் என்றும் இப்படங்கள் ஒரு கோடி முதல் இரண்டு கோடி பட்ஜெட்டுக்குள் உருவாக்கப்படுவதால் இதன் மூலம் ஒரு மாதத்தில் சுமார் 50 கோடி வரை தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த மாத இறுதியில் மார்ச் 29 அன்று விஜய் சேதுபதி நடித்த ’சூப்பர் டீலக்ஸும் மார்ச் 28 அன்று நயன்தாரா நடித்த ’ஐரா’வும் வெளிவரவுள்ளன. அதுவரை சிறிய பட்ஜெட் படங்களே அதிகளவில் வெளிவரவுள்ளன.