மத்திய,மாநில அரசுகளின் கல்விக்கொள்கை குறித்து விமர்சித்ததற்காக பா.ஜ.க.வினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தில் முக்கிய வில்லன் வேடத்தின் முன்னாள் பா.ஜ.க.எம்பி ஒப்பந்தமாகியிருக்கிறார்.

சூர்யாவின் சொந்த நிறுவனமான 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சுதா கொங்குரா இயக்கிவரும் படம் ’சூரரைப் போற்று’.இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது. சென்னை, சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் மோகன் பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டிப்பதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் தற்போது சூரரைப் போற்று படத்தில் நடிக்க முன்னாள் பாஜக எம்.பியும் நடிகருமான பரேஷ் ராவல் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வந்த பரேஷ் ராவல் சூரரைப் போற்று படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருக்கிறார். ‘சர்வம் தாள மயம்’படத்தின் நாயகி அபர்ணா பாலமுரளி இப்படத்தில் சூர்யாவுடன் ஜோடி போட, ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.