நிர்வாண மனிதன் யார்...? எதிர்பார்ப்பை தூண்டிய "சைக்கோ"...!


மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'சைக்கோ' படத்தின் டீசர் பார்த்த மாத்திரமே பார்வையாளர்களின் ஆர்வத்தை பல மடங்கு தூண்டியுள்ளது. 

திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், 'நண்பேண்டா', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'சரவணன் இருக்க பயமேன்' உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது உதயநிதி ஸ்டாலின், மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் 'சைக்கோ' படத்தை தயாரித்ததோடு மட்டுமல்லாது, பார்வை இல்லா மாற்றுத்திறனாளி இளைஞராகவும் நடித்துள்ளார். கிரைம் திரில்லர் படமான சைக்கோவில் உதயநிதி ஸ்டாலினுடன் நித்யா மேனன், அதிதி ராவ் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைப்பில், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் அதிரடியாக உருவாகியுள்ளது 'சைக்கோ'. 

இந்த படத்தின் டீசர் நேற்று யூ-டியூப்பில் வெளியான நிலையில், ஒரே நாளில் கிட்டதட்ட ஒன்றரை மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். டீசர் தொடங்கியதுமே நிர்வாணமாக தோன்றும் இளைஞர் ஒருவர் திகில் கிளப்புகிறார். அதன்பின்னால் விரியும் அதிரடி சேஸிங் காட்சிகளும், போலீசாரின் தேடல் காட்சிகளும்,  மூட்டைகளில் காணப்படும் பெண்களின் சடலங்களும், சைக்கோ திரில்லர் கொலையாளியை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது. டீசர் முழுவதும் தோன்றும் ரத்த காட்சிகளும், இசை ஞானி இளையராஜாவின் மிரட்டும் பின்னணி இசையும் நமக்கு இனம் புரியாத திகிலை உணரவைக்கிறது. 

இறுதியாக துப்பாறிவாளன் படத்தில் சிறுவன் ஒருவனது நாய் இறந்ததை மையமாக கொண்டு நகரும் கதைக்களம், அதிரடி திருப்பங்களுடன் கொலைகார மாபிஃயா கும்பலை தோலுரித்துக் காட்டும். அதேபோன்று செம திரில்லராக வெளியாகியுள்ள சைக்கோ படத்தின் டீசர். அப்படி படத்தில என்னதான் இருக்கு என்பதை பார்த்தே தீர வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் தூண்டியுள்ளது.