நடிகர் சூர்யாவின் நெருங்கிய நண்பரும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான ஞானவேல் ராஜா முன்னாள் டி.ஜி.பி. திலகவதியின் மகனுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் கோடம்பாக்கத்தில் பரபரப்பாகியுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்த குடியிப்பில் முன்னாள் டிஜிபி திலகவதிக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை பிரபல சினிமா தயாரிப்பாளரான ஞானவேல்ராஜாவுக்கு திலகவதி வாடகைக்கு விட்டுள்ளார். அதன்படி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா குடும்பத்துடன் ஒன்றரை ஆண்டுகளாக வசித்து வந்தார். 

 தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் இந்த  வீட்டிற்கு சினிமா பிரபலங்கள்  பலர் அடிக்கடி வந்து செல்வதாக அருகில் வசிக்கும் உயர் அதிகாரிகள் குடும்பத்திற்கு தொல்லையாக இருப்பதாக முன்னாள் டிஜிபி திலகவதியிடம் அவர்கள் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஞானவேல் ராஜாவிடம் வீட்டை காலி செய்யும் படி திலகவதி  கூறியுள்ளார். அதற்கு தயாரிப்பாளரும் வீட்டை காலி செய்வதாக உறுதி அளித்துள்ளார். அதன்படி வீட்டை கடந்த 24ம் தேதி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டை காலி செய்ய வேண்டும். ஆனால் வீட்டை காலி செய்ய வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முன்னாள் டிஜிபி திலகவதியின் மகன் தனது மனைவியுடன் வீட்டிற்கு சென்று நேரடியாக ஞானவேல்ராஜாவிடம் வீட்டின் சாவியை கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் வசிக்கும் உயர் அதிகாரிகள் குடும்பத்தினர் சத்தம் கேட்டு வெளியே வந்தனர். அப்போது சிலர் தங்களது செல்போனில் தகராறை வீடியோ எடுத்துள்ளனர்.

பிரச்னை குறித்து தகவல் அறிந்த விரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை வீட்டை காலி செய்ய வைத்து சாவியை வாங்கி திலகவதியிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே வீட்டை காலி செய்ய கோரி முன்னாள் டிஜிபி திலகவதி மகன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளஙகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யாவின் பினாமி என்று சொல்லப்படும் ஞானவேல் ராஜா இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட படங்களை விநியோகித்துள்ளார். பல கோடிகளுக்கு அதிபதியான இவர் எதற்காக வாடகை வீட்டில் குடியிருந்தார் என்பது புரியாத புதிராக உள்ளது.