மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக வெளியிட தடைகோரிய ஜெ.தீபாவின் மனுவுக்கு டிசம்பர் 11ஆம் தேதிக்குள் பதிலளிக்க இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரனாவத் நடிக்கும் "தலைவி" என்ற தமிழ் படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய்-யும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் "குயின்" என்ற இணையதள தமிழ் தொடரை இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனனும் இயக்கி வருகின்றார். 

இந்நிலையில் தன் அனுமதியில்லாமல் தலைவி, ஜெயா, குயின் உள்ளிட்ட திரைப் படங்களை தயாரிக்கவோ, விளம்பரப்படுத்தவோ, திரையிடவோ கூடாது என  தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான ஜெ.தீபா தொடர்ந்த உரிமையியல் வழக்கு  நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது...

அப்போது மனுதாரர் தீபா தரப்பில் ,  ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரிக்கும் பணிகள் தற்போதுதான் தொடங்கி நடைபெற்று வருவதாகவும், ஆனால் இணையதள தொடர்களாக தயாரிக்கப்பட்டவை வரும் சனிக்கிழமை வெளியிடப் போவதாக  தகவல்கள் வந்துள்ளதால், தன் மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அப்போது இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில், தீபா தொடர்ந்த வழக்கின் ஆவணங்கள் இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இவற்றை பதிவு செய்த நீதிபதி, வழக்கு ஆவணங்களை கௌதம் வாசுதேவ் மேனன் தரப்புக்கு உடனடியாக கொடுக்க தீபா தரப்புக்கும், அந்த மனுவுக்கு பதில் மனுத்தாக்கல் செய்ய கௌதம் மேனன் தரப்புக்கும் உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.