entertainment tax 8 percentage... vishal announced
தமிழ் திரைப்படங்களுக்கு தமிழக அரசு விதித்திருந்த கேளிக்கை வரி 10 சதவீதத்திலிருந்தது 8 % ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
தமிழகத்தில் சினிமா படங்களுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த தொகையை உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ள நிலையில், 30 சதவீத கேளிக்கை வரிச்சுமையை தாங்கி சினிமா தொழிலை தொடர முடியாது என்று தமிழ் திரையுலகினர் கொந்தளித்தனர்.
கேளிக்கை வரியை நீக்கும் வரை தமிழ் திரைப்படங்களை வெளியிடமாட்டோம் என்றும் அறிவித்தனர். அதைத்தொடர்ந்து தமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரியை 10 சதவீதமாக குறைத்து தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. மற்ற மொழி படங்களுக்கு 20 சதவீதம் என்று அரசு நிர்ணயித்தது.
ஆனால் 10 % கேளிக்கை வரியைக் கூட தங்களால் தாங்க முடியாது என திரையுலகைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே கேளிக்கை வரி குறைப்பு தொடர்பாக சினிமா திரையுலகினரை தமிழக அரசு அழைத்து பேசியது. அரசு தரப்பில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வேலுமணி பங்கேற்றனர்.
தமிழ் திரையுலகினர் தரப்பில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர் சங்கம், சினிமா வினியோகஸ்தர்கள் சங்கம் உள்பட பல சங்கங்கள் பங்கேற்றன. 3 நாட்களாக தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற 3-ம் நாள் பேச்சுவார்த்தையை அடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் திரையுலகினர் சந்தித்து பேசினர். இதைத் தொடர்ந்து செய்தியார்களிடம் பேசிய தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் தமிழ் சினிமாக்களுக்கு கேளிக்கை வரி 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
கேளிக்கை வரி தொடர்பான பிரச்சனைக்கு சுமூக தீர்வு ஏற்பட்டதையடுத்து, புதிய படங்கள் வெளியாவதில் தடை நீங்கியது. இதையடுத்து தீபாவளிக்கு திட்டமிட்டபடி புதிய திரைப்படங்கள் வெளியிடப்படும் என விஷால் தெரிவித்தார்.
