தனுஷின் பேரக்குழந்தைகள் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் காலத்தில்தான் ரிலீஸாக வாய்ப்புண்டு என்று மிக தீர்க்கமாக நம்பப்பட்ட ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்திற்கு கல்வித் தந்தையும், பாக்யராஜ் அணியின் பொதுச்செயலாளரும்  ‘பொருளாலருமான ஐசரி கணேஷால் ஒரு விடிவு காலம் வந்திருப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ’என்னை நோக்கிப் பாயும் தோட்டா’.கெளதம் மேனன் இயக்கியிருக்கிறார்.எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் இந்தப்படம் சில காரணங்களால் அல்ல பல காரணங்கள் பல்வேறு மாதங்களாக  தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் வேலைகள் முழுமையாக முடிவடைந்திருக்கிறது.படம் தணிக்கை செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது.

பெரும்பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாகப் பட வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தநிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான ஐசரிகணேஷ், இப்படத்தை வெளியிட உதவி செய்ய முன்வந்திருக்கிறாராம். இதன் காரணமாகப் பட வெளியீட்டில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்திருக்கிறதாம்.இதனால் ஜூலை மாதத்தில் படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கு இதுபோன்ற அறிவிப்புகள் எண்ணிக்கையற்ற அளவில் வந்திருப்பதால் தியேட்டரில் படத்தை பார்ப்பது வரை தனுஷ் ரசிகர்கள் நம்பமாட்டார்கள்.