‘தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவேண்டுமென்றால் சிவப்பாகவும் புஷ்டியாகவும் இருக்கவேண்டும். நான் கருப்பாகவும் ஒல்லியாகவும் இருக்கிறேன் என்பதற்காகவே, திறமையிருந்தும்  நான் முன்னணி நடிகையாகமுடியவில்லை’ என்கிறார் ‘காலா’வில் ரஜினியின் மனைவியாக நடித்த ஈஸ்வரி ராவ்.

1990ல் ‘கவிதை பாடும் அலைகள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஈஸ்வரிராவ். பின்னர் பாலுமகேந்திராவால் ‘ராமன் அப்துல்லா’ படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது அதே பாலுமகேந்திராவின் படத்தலைப்பில் எம்.ஆர்.பாரதி இயக்கியுள்ள  ‘அழியாத கோலங்கள்’ படத்தில் நாயகியாக நடித்துவருகிறார்.

தான் தமிழ்சினிமாவில் பெரிய அளவில் வெற்றிபெறமுடியாமல் போனதற்கான காரணம் குறித்து மனம் திறந்த ஈஸ்வரிராவ், ‘‘தமிழ்மொழி, டான்ஸ், நடிப்பு என்று எதுவும் தெரியாமல், 17 வயதில் ‘கவிதைபாடும் அலைகள்’ படத்தில் அறிமுகம் ஆனேன்.

கதாநாயகியாக தொடர்ந்து நடிக்க விரும்பினேன். ஆனால் என் கறுப்பு நிறமும் ஒல்லியான உடலமைப்பும் அதற்கு பெரிய தடையாக இருந்தன. நிறப்பாகுபாட்டால் ரொம்ப வருத்தப்பட்டேன். கவர்ச்சியான வேடங்கள்ல நடிக்கவும் எனக்கு விருப்பமில்லை. ஆசைப்பட்டபடி என் சினிமா வாழ்க்கை அமையவில்லையே என்று கவலை ஏற்பட்டது. பிறகு சீரியலுக்கு வந்ததுடன், ‘சரவணா’ உள்பட சில படங்களில் நடித்தேன். 2006 -ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை.

‘காலா’ படம் தொடர்பாக ரஞ்சித், 2 மாதமாக என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார். 3வது மாதம்தான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நான் நடிப்பது உறுதியாச்சு. என்னை அறிமுகப்படுத்திய பாலு மகேந்திராவுக்கு அர்ப்பணிப்பு பண்ற மாதிரியும், பெண்களை உயர்வா சித்திரிக்கும் வகையிலும் உருவாகிவரும் படம்தான் ‘அழியாத கோலங்கள்’. இந்த படத்தை தயாரிப்பதுடன், படத்தில் சில காட்சிகளில் நடித்து இருக்கிறேன்’ என்கிறார்.